2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பனை வளத்தை பெருக்கினால் கையேந்தத் தேவையில்லை: ஐங்கரநேசன்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 19 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெகநாதன், நா.நவரத்தினராசா


வடமாகாணத்தில் பனை வங்களை ஆதாரமாகக் கொண்ட பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்தால் நாம் யாரிடமும் தங்கியோ அல்லது அடிபணிந்து வாழவேண்டிய அவசியமில்லை என வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தை மற்றும் மாலைதீவு றோட்டறிக் கழகங்கள் ஆகியன இணைந்து இலங்கையில் ஒரு இலட்சம் பனம் விதைகள் நடும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளன.

இதன் முதற் கட்டமாக சிறுப்பிட்டியில் 1000 பனம் விதைகள் நடும் வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த வைபவத்தினை  ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே விவசாய அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு அமைவாகவே சிறுப்பிட்டியிலுள்ள இரண்டரை கிலோ மீற்றர் நீளமான விவசாயக் காணியில் மேற்படி விதைகள் நாட்டப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் பசுபதி ஜுவரத்தினம், வலி.கிழக்கு கோப்பாய் பிரதேச சபைத் தலைவர் அ.உதயகுமார், வெள்ளவத்தை றோட்டரிக் கழக தலைவர் எஸ்.லலித்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அவர் மேலும் உரையாற்றுகையில், 

இலங்கையில் பனை மரங்கள் அதிகம் காணப்படுவது தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலே ஆகும். இங்கு சுமார் 11 மில்லியன் பனை மரங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக வடமாகாணத்தில் 9.5 மில்லியன் பனை மரங்கள் இருக்கின்றன.
 
உலகிலே அதிகமான பனை மரங்கள் இந்தியாவில் அதுவும் 50 விழுக்காடுகளுக்கும் அதிகமான மரங்கள் தமிழ்நாட்டில் காணப்படுகின்றன. இதிலிருந்து பனைமரங்கள் தமிழ் மக்களுக்கான தேசிய அடையாளம் என்பது புலப்படுகின்றது.

வடமாகாணம் வரண்ட பிரதேச வலையமாகவிருப்பதினால் பெருங்காடுகள் இல்லையென்ற குறையினை இந்தப் பனந்தோப்புக்கள் பூர்த்தி செய்கின்றன. 

சூழவியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பனை வளத்தின் பயன்கள் பற்றி நாம் முழுமையாக இன்னமும் உணர்ந்து கொள்ளாது இருக்கின்றோம்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளும் தங்களது இயற்கைத் தாவர வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டே தமது தேசியப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புகின்றன. ஆனால் நாம் பனை மரத்தை குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்குரிய மரமாக ஒதுக்கி வைத்துள்ளோம்.

உலகத்திலேயே ஒரு மரத்தை ஒரு சமூகத்திற்குரிய மரமாக ஒதுக்கிய சிறுமை மனப்பாங்கு தமிழர்களையே சாரும். 

கற்பகத்தருக்களான (பனை மரத்திலிருந்து கிடைக்கும் பயன்கள்) பனை மரங்களின் பொருளாதாரப் பயனை குறைந்த பட்சமேனும் இன்னும் நாங்கள் அறுபடை செய்யவில்லை. இந்நிலை மாறி பனைப் பொருளாதாரத்தினை வளர்த்தெடுப்பதற்கான கல்வியையும், நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய தொழில் முறைமைகளையும் அறிமுகப்படுத்த வேண்டும். சமூக வேறுபாடுகளற்று எல்லோரும் இத்துறையில் ஈடுபட வேண்டும்.

கடந்த கால யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட தாவரமாக பனை மரம் காணப்படுகின்றது. யுத்தத்தில் ஈடுபட்டவர்கள் பனை மரங்களை பதுங்கு குழிகள், காப்பரண்கள் அமைப்பதற்கு வெட்டி வீழ்த்தியதாலும், எறிகணை வீச்சுகளாலும் ஏறத்தாழ  4.5 மில்லியன் பனைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகக் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இப்போதும் பனை அழிப்புத் தொடர்ந்து கொண்டோதான் இருக்கின்றது. சில தினங்களுக்கு முன்னர் அரச தரப்பினரின் ஆதரவோடு புதுக்குடியிருப்பில் மரக்காலை அமைப்பதற்காக 250 பனைமரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன.
 
பனை மரங்கள் இயற்கையிலேயே எவரது கவனிப்பும் அற்று வளரக்கூடியதாக இருந்தபோதும் அது முளைதிறன் குறைந்ததொரு மரமாகும். நூறு பனை விதைகள் நட்டால் அவற்றில் 35 விதைகளே முளைக்கின்றன. இதனால் இவ்வாறான பனைமர நடுகைத் திட்டங்களின் மூலமே இழந்த பனை வளத்தை ஈடுசெய்ய முடியும். வீதியோரங்களிலும் அரச காணிகளிலும் மாத்திரம் அல்லாது தரிசு நிலங்களாக விடப்பட்டிருக்கும் தனியார் காணிகளிலும் இத்திட்டம் முன்னெடுக்கப்படவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .