2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

'போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள நாட்டில் பொதுநலவாய மாநாடு நடத்தப்படுவது தவறு'

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 27 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

சர்வதேச ரீதியில் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நாட்டில் சர்வதேச நாடுகள் கலந்துகொண்டு ஒரு மாநாட்டை நடத்துவது தவறானது. இந்தத் தவறை ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பில் நேற்று சனிக்கிழமை அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

'கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்கவுள்ளது.

யுத்தத்திற்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையினால்  இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு நீதியான விசாரணை தேவை என்று வலியுறுத்தப்பட்டும் இலங்கை எந்தவித நடடிக்கையும் எடுக்கவில்லை.
இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துமாறு மனித உரிமைப் பேரவையில் இரண்டு தடவைகள் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோதும், இன்றுவரை அது தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுப்பதாகத் தெரியவில்லை.

இன்றும் காணாமல் போதல்கள், அச்சுறுத்தல்கள், ஊடக அடக்கு முறைகள், மனித உரிமைகள் மீறல்கள் ஆகியன  தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.

அத்துடன், சர்வதேச ரீதியில் போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு நாட்டில் சர்வதேச நாடுகள் கலந்துகொண்டு ஒரு மாநாட்டை நடத்துவது தவறானது. இது இலங்கை செய்த மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்துவதாக அமையும்.  இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

இதேவேளை, இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் ஆகியோருக்கு இதுவரை எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. அழைப்பு விடுத்தாலும் இதில் கலந்துகொள்ளப் போவதில்லை' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .