2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தமிழர் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க விடாமல் இராணுவம் தடுக்கிறது: குருகுலராஜா

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 06 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

தமிழ் மக்களாகிய எமது வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க விடாமல் இராணுவத்தினர் தடுக்கின்றதாக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

நல்லூர் பிரதேச செயலக கலாசார பேரவையினால் நல்லூர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற 'கோவில் நகரம்' இறுவெட்டு வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'யாழ். மாவட்டத்தில் பல பிரதேசங்களில் வரலாற்று சின்னங்கள் இராணுவத்தினரால் தகர்க்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில், வலி. வடக்கு பிரதேசத்தில் ஆலயம் ஒன்று அண்மையில் இடிக்கப்பட்டு விட்டது. எமது பண்டைய வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க முடியாமல் இருக்கின்றது.

அரசு எம்மைத் தாக்குவதற்கு பல சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பாதுகாப்புப் படை என்ற போர்வையில் எமது நிலங்களை இராணுவத்தினர் அபகரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கு சேவை செய்வதா அல்லது மாகாண சபைக்கு சேவை செய்வதா அல்லது இராணுவத்தினரிடம் விழுவதா அல்லது ஆளுநரிடம் பறப்பதா என தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இராணுவத்தினரை வெளியேற்ற நாம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். ஏங்களுக்கு எதிரானவர்கள் பல சூழ்ச்சிகளை செய்ய நினைக்கின்றார்கள். அது தொடர்பாக நாம் கவனமாக இருக்க வேண்டும்.

மாவீரர்கள் நாளில் உயிர்நீத்தவர்களுக்கு விளக்கேற்றுவதற்கு பல தடைகள் விதிக்கப்பட்ட போதிலும், சில வீடுகளில் விளக்கேற்றப்பட்டதுடன், வடமாகாண சபை உறுப்பினர்களாகிய நாம் மரங்களையும் நாட்டியிருந்தோம்.

சிங்கள மக்களுக்காக போராடி உயிர்நீத்த இராணுவத்தினருக்கு ஆனையிறவில் சிலை அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த சிலையினை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.

சிங்கள மக்களை காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த இராணுவத்தினருக்கு சிலை வைக்கப்படுமாயின், ஏன் தமிழ் மக்களுக்காக உயிர்நீத்தவர்களுக்கு ஒரு சுட்டி ஏற்றக்கூடாது.

எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று பொங்கல் பானைக்குள் அரிசி போடுவதற்கு முன்னர் ஒரு சுட்டி விளக்கினை கொழுத்தி அஞ்சலி செலுத்தி விட்டு, பானையில் அரிசி போட வேண்டும். அதன்போது, பாதுகாப்பு படையினர் எம்மைச் சுடமுடியாது என அவர் மேலும் தெரிவித்தார். கோவில் நகரம் இறுவெட்டினை கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா வெளியிட்டு வைத்தார்.

மேற்படி இறுவெட்டில் சங்கிலிய மன்னன் ஆட்சிக்குட்ட காலத்தில் இருந்த நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் அதனுடன் சார்ந்த ஆலயங்களின் ஆவணப் படங்களும் ஒவ்வொரு ஆலயங்களின் வரலாற்றுப் பதிவுகளும் உள்ளடங்கியிருக்கின்றன.' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • Sumathy M Friday, 06 December 2013 02:25 PM

    அப்ப உங்கட வேலை என்ன? உதுகளை சொல்லிக்கொண்டு இருக்கிறது மட்டும் தானே? பேசாமல் போய் உருப்படியாக உதுகளை நிப்பாட்ட ஏதாவது செய்யுங்கோ. காலம் காலமாக உதுகளை சொல்லி சொல்லியே அரசியல் பிழைப்பு நடத்துறியல்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .