2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யாழில் கடந்த வாரங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா, நா.நவரத்தினராசா
 
யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி, யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் பற்றி தெரிவித்திருந்தார்.
 
கடனை செலுத்துவதற்கு பாலியல் தொடர்பு வைக்குமாறு மனைவியை வற்புறுத்திய கணவனுக்கு விளக்கமறியல்
வங்கியில் கடன் தொகையினை செலுத்துவதற்காக வேறு நபரிடம் பெற்ற கடன் திருப்பிக் கொடுக்க முடியாததினால், மனைவியை வேறு ஆண்களுடன் பாலியல் தொடர்பு மேற்கொண்டு பணம் பெற்று வருமாறு வற்புறுத்திய கணவன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி இன்று (06) தெரிவித்தார்.
 
சுன்னாகத்தில் இயங்கும் வங்கி ஒன்றில் அரியாலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வங்கி கடன் பெற்றுள்ளார். வங்கிக்கடனை தவணை முறையில் செலுத்தியவதற்கு அயலில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி செலுத்தி வந்துள்ளார்.
 
இவ்வாறு வங்கி கடனை செலுத்தி வந்தவர் அயலில் உள்ளவர்களிடம் வாங்கிய கடனை செலுத்த முடியாத காரணத்தினால் மனைவியை வேறு நபர்களுடன் பாலியல் ரீதியில் தொடர்பு வைத்து பணத்தினை பெற்று வருமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
 
கணவனின் வற்புறுத்தலை தாங்க முடியாத மனைவி, யாழ். சிறுவர் பெண்கள் பிரிவு பொலிஸ் பிரிவில் கடந்த மாதம் 28ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
 
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த கணவன், யாழ். பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வேளையில், நீதிபதி எதிர்வரும் 13ஆம் திகதி வரை குறித்த கணவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
 
போலி நகைகளை அடைவு வைக்க முயன்ற பெண்கள் இருவருக்கும் விளக்கமறியல்
போலி நகைகளை வங்கியில் அடைவு வைத்த பெண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி இன்று (06) தெரிவித்தார்.
 
அச்சுவேலி பகுதியிலுள்ள இலங்கை வங்கியில் இருபாலை மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள் கடந்த மாதம் 28, 29, 30ஆம் திகதிகளில் சுமார் 5 லட்சத்து 24 ஆயிரம் ரூபாவிற்கு போலி தங்க நகைகளை அடைவு வைப்பதற்கு சென்றுள்ளனர்.
 
இதன்போது, வங்கி முகாமையாளர் குறித்த நகைகள் போலி என அடையாளம் கண்டதை தொடர்ந்து, அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
 
அந்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த இரு பெண்களும் அச்சுவேலி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, மல்லாகம் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, நீதிபதி குறித்த இரு பெண்களையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.
 
யாழில் சிறு குற்றம் புரிந்த 179 பேர் கைது: எஸ்.பி
யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 179 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி இன்று வெள்ளிக்கிழமை (06) தெரிவித்தார்.
 
யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச் செயல்களின் பிரகாரம்,
 
யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 35 பேரும் அடித்து காயம் ஏற்படுத்தியவர்கள் 21பேரும் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியவர்கள் 13 பேரும் மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் 05பேரும் திருடிய குற்றச்சாட்டில் 05பேரும் வீதி விபத்து தொடர்பில் ஒருவரும் மதுபோதையில் கலகம் விளைவித்தவர்கள் 03பேரும் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் 05பேரும்  சூழல் மாசடைதலுக்கு காரணமானவர்கள் 03பேரும் கொள்ளைச் சம்பவத்தில் ஒருவரும் பாரிய குற்றங்கள் புரிந்தவர்கள் 12பேரும் மோசடியில் ஈடுபட்டவராக ஒருவரும் அனுமதிப் பத்திரமின்றி மாடு வைத்திருந்தவராக ஒருவரும் மரணம் விளைவித்தவர்களாக 02 பேரும் பாலியல் குற்றச்சாட்டில் ஒருவரும் பாதுகாப்பு கருதி 02பேரும் பணத்திற்காக மனைவியை விற்ற குற்றத்தில் ஒருவரும் ஏனைய குற்றங்களுக்காக 67 பேருமாக மொத்தம் 179 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .