2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன், எஸ்.ஜெகநாதன்,நவரத்தினம் கபில்நாத்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு செய்தியாளராகக் கடமையாற்றும் சிவஞானம் செல்வதீபன் திங்கட்கிழமை (14) இரவு புறாப்பொறுக்கிச் சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் தாக்கப்பட்டமையைக் கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

சும்பவத்தில் படுகாயமடைந்த செல்வதீபன், தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் த.சித்தார்த்தன், தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் முழுமையாக நிலைகொண்டுள்ள நிலையில் ஊடகவியலாளர் சிவஞானம் செல்வதீபன் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு ஆளுந்தரப்பே பொறுப்புக்கூற வேண்டும் என சித்தார்த்தன் கூறியுள்ளார்.

ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல்களாகவே கருதப்பட வேண்டியவை. மக்களின் பிரச்சினைகளை உலகிற்கு சொல்லும் ஊடகவியலாளர்களின் குரல்களை நசுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக சம்பந்தப்பட்ட தரப்புக்கள் நிறுத்த வேண்டும்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிவஞானம் செல்வதீபன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'யுத்தம் முடிந்த பின், தமிழருக்கு வடக்கு, கிழக்கில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை. வடக்கில் வசந்தம் வீசுகிறது என அரசாங்கம் உலகை ஏமாற்றி பொய்யுரைத்து வருகிறது. ஆனால் ஒழுங்கற்ற மீள்குடியேற்றம், உதவிகள் வழங்கப்படாமை, துரித சிங்களமயமாக்கல் நிகழ்ச்சித்திட்டம் என்பனவே இடம்பெறுவதுடன், மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இவ்வாறான மக்களின் துன்ப துயரங்களையும், அரசாங்கத்தின் பொய்ப்பித்தலாட்டங்களையும் தெட்டத்தெளிவாக ஊடகங்களும், ஊடகவியலாளர்களும்  வெளியுலகத்துக்கு வெட்டவெளிச்சமாக்கி வருகின்றனர். இது தனது நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான செயற்பாடு என்பதால் அரசு ஊடகவியலாளர்கள் மீது வன்மத்துடன் காழ்ப்புணர்வு கொண்டதனால் காலத்துக்குக் காலம் ஊடகவியாலாளர்கள் மீதும் ஊடகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது என நாங்கள் சந்தேகிக்கின்றோம்.

அதன் சமீபத்திய தொடர்ச்சியாகத்தான் புத்தாண்டு தினத்தன்று வடமராட்சி, கரவெட்டியைச் சேர்ந்த சிவஞானம் செல்வதீபன் எனும் ஊடக நண்பன் மீது இனந்தெரியாதோர் என்ற போர்வையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஊடக சுதந்திரம் பேணப்படுகிறது, மனிதஉரிமைகள் காக்கப்படுகின்றன, தமிழர்கள் சர்வதேசத்துக்கு பொய் சொல்கிறார்கள் என்று கூறிவருவோர் இச்சம்பவத்தின் மூலம் மீண்டும் ஒருதடவை தங்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் மூலம் ஊடக சுதந்திரமும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமும் மீறப்பட்டுள்ளதுடன், வடக்கில் வாழும் தமிழர்கள் எவ்வாறான அவல வாழ்வை வாழ்கின்றார்கள் என்றும் உலகுக்கு மீண்டும் எடுத்தியம்பும் சம்பவமாகவும் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடபுலத்தினில் மீண்டும் முனைப்பு பெற்றிருக்கும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் கொலை முயற்சித்தாக்குதல்கள் தொடர்பினில் யாழ். ஊடக அமையம் தனது வன்மையான கண்டனத்தையும் கவலையினையும் தெரிவித்துக்கொள்கின்றது.

இறுதியாக ஜெனீவாவினில் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரினில் இலங்கையில் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பது பற்றி சர்வதேசம் பிரஸ்தாபித்திருந்த போதும் அண்மைய சம்பவங்கள் அது தொடர்பினில் அரசு அக்கறை கொள்ளவில்லையோ என்ற சந்தேகத்தினையே  எமக்கு ஏற்படுத்துகின்றது.

இத்தகையதொரு சூழலினில் வடமராட்சி பிரதேச செய்தியாளர் சிவஞானம் செல்வதீபன் கொலை முயற்சி தாக்குதலொன்றினில் உயிர் தப்பியுள்ளார்.

செல்வதீபன் மீதான கொலை முயற்சி தொடர்பினில் பக்கசார்பற்ற நீதி விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை அரசினை வேண்டி நிற்பதுடன்  தொடரும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பினில் உலகளாவிய ஊடக அமைப்புக்களின் கவனத்தை ஈர்க்க நாம் பாடுபடுவோமென்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, இலங்கையின் வடபுலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியிலிருந்து அயராமல் உழைக்கும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதாக வவுனியா தமிழ் ஊடகவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் தாக்கப்பட்ட சிவஞானம் செல்வதீபன் மீதான தாக்குதலை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கயில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் இலங்கையில் இடம்பெற்றுவரும் பல்வேறான சமூகத்திற்கு மாற்றான செயற்பாடுகளை வெளியுலகிற்கு துணிவுடன் வெளிக்கொணர்ந்தும் அதற்கான தீர்வுகளை பெறுவதற்கு தளமாகவுமுள்ள ஊடகவியலாளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தாக்கப்பட்டு வருவதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஊடகவியலார்கள் மீதான தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவது என்பது எட்டாக் கனியாகவே இருக்கின்றது. இந்த நிலையில் தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களின் மீதான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றமை ஜனநாயகத்தின் மீதான ஐயப்பாடுடைய கேள்விக்கு வலுச்சேர்க்கின்றது.

சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று யாழ். வடமாரட்சியில்   தாக்கப்பட்ட எமது சக ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் உடன் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். அத்துடன் இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்கள் தமது தொழிலை தங்கு தடையின்றி மேற்கொள்ள கூடிய சூழல் உருவாக்கப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம்' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X