2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

யாழில் சூரியகல ஆய்வுப் பட்டறை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

'சூரியகலத் தொழில்நுட்பமும் இலங்கையில் அதனோடிணைந்த தொழில் முயற்சிகளும்'என்ற தலைப்பிலான மூன்று நாள் ஆய்வுப்பட்டறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதீகவியற்துறை மண்டபத்தில் இன்று புதன்கிழமை(16) முதல் ஆரம்பமாகியுள்ளது.

பேராதனை, களனி, ருகுணு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகங்களுடனான கூட்டு ஆய்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க ஆய்வு நிறுவனமான சிவானந்தன் ஆய்வகத்தின் ஏற்பாட்டில் இந்த ஆய்வுப்பட்டறை இடம்பெற்று வருகின்றது.

யாழ். பல்கலைக்கழக பௌதீகவியல் துறை ஒழுங்கமைத்துள்ள இந்த ஆய்வுப் பட்டறையில் சிக்காக்கோவில் அமைந்துள்ள இலினோயிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஈழத்தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன், விஞ்ஞானிகளான றிம் கூட்ஸ், றிம் கெசற், ரமேஸ் தேரே, மௌபாஃக் அல் ஜசீம் ஆகியோரே வளவாளர்களாகக் கலந்துகொண்டு கருத்துக்களை வழங்கி வருகின்றனர்.

நிகழ்விற்கான ஆரம்ப உரைகளினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உபதலைவர் பேராசிரியர் ரஞ்சித் செனரட்ன பல்கலைக்கழக ஆராய்ச்சிக்கான குழுத்தலைவர் பேராசிரியர் க.கந்தசாமி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் சி.சிறிசற்குணராசா ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

வளவாளர்களுக்கான ஆரம்ப உரையினை பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் நிகழ்த்தினார்.

2012 ஆம் ஆண்டு கண்டியில் உள்ள அடிப்படைக் கல்வி நிறுவனத்திலும், 2013 ஆம் ஆண்டு ருகுணு பல்கலைக்கழகத்திலும் இந்த ஆய்வுப் பட்டறை நடைபெற்று வந்தது.

'கற்மியம் ரெலுரைட்' சூரியக் கலத் தொழில்நுட்பத்தில் போதிய அறிவினை வளர்க்கும் வகையில் இலங்கையிலுள்ள துறைசார் ஆய்வு மாணவர்களைப் பயிற்றுவிப்பதற்காக அமெரிக்க ஆய்வு நிறுவனமான 'சிவானந்தன் ஆய்வகம்' இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் வளவாளர்களை அனுப்பி வைப்பதோடு, இலங்கையிலிருந்து துறைசார் ஆய்வு மாணவர்களையும், விரிவுரையாளர்களையும் அமெரிக்காவுக்கு அழைத்துப் பயிற்சிகளையும் வழங்கிவருகின்றது.

ஆய்வுப்பட்டறை நிறைவு தினத்தன்று யாழ்.பல்கலைக்கழக பௌதீகத் துறையினரால் சூரியக் கலத் தொழில்நுட்பம் தொடர்பான செயல்முறை விளக்கங்களும் வழங்கப்படவுள்ளன.

இலங்கையில் 'கற்மியம் ரெலுரைட்' சூரியக் கலத் தொழில்நுட்பம் தொடர்பான செய்முறை ஆய்வு உபகரணங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாத்திரமே இருக்கிறது.

அத்துடன், சிவானந்தன் ஆய்வகத்தின் நிறுவுனரான பேராசிரியர். சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் உயர் விருதான 'மாற்றத்துக்கான சாதனையாளன்' விருதைக் கடந்த வருடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .