2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி பாதிக்கப்படாத பகுதிகளுக்கு செல்வதை தடுக்கவும்: யோகேஷ்வரன்

Kogilavani   / 2014 ஏப்ரல் 23 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

யுத்தத்தால் பாதிக்கப்படாத பகுதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்திக்கான நிதி சென்றடைவதைத் தடுக்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

பொது நிர்வாக அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐரோப்பிய ஒன்றியம் பல கோடிக்கணக்கான ரூபாய் நிதியை மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி வேலைகளுக்கு ஒதுக்க ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிலையில் ஒரு சில ஆளும் தரப்பு அரசியல் வாதிகள் எந்தவித பாதிப்புமில்லாத தங்களது பகுதிகளுக்கும் இந்த நிதியை ஒதுக்கி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முயற்சிப்பதையிட்டு வேதனையடைகின்றோம்.

கடந்தகால யுத்தத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. 

இப்பகுதியே அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்துத் தெரிவு செய்யப்பட வேண்டியதுமாகும்.

இவ்வேளையில் சனத்தொகை அடிப்படையில் இந்நிதியைப் பங்கீடு செய்து எதுவித பாதிப்புமற்ற தமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஏற்க முடியாது.

இவ்விடயத்தை நாம் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளோம்.

அதேவேளை தாங்கள் இம்மாவட்டத்தின் ஒரு பொறுப்புவாய்ந்த உயர் அரச அதிகாரி என்கின்ற வகையில் இவ்விடயத்தில் தலையிட்டு மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் அபிவிருத்திக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகள் சென்றடைய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.  தங்களது துரித நடவடிக்கையை எதிர்பார்க்கின்றேன்' என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தின் பிரதிகள் பொதுநிர்வாக அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆகியோர் உட்பட இன்னும் பல அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X