2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ஐ.நா. அறிக்கையை காலந்தாழ்த்தி வெளியிட அனுமதிக்க கூடாது: சுரேஸ்

Kanagaraj   / 2015 ஜனவரி 28 , பி.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கையை காலந்தாழ்த்தி வெளியிட அனுமதிக்க கூடாது என்றும் இது தமிழ் மக்களின் பிரச்சினைகளை இல்லாமல் செய்யும் முயற்சியாகும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் புதன்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகவுள்ளது. மைத்திரி  அரசாங்கமோ அல்லது மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமோ, எதுவாகவிருந்தாலும் அவர்கள் நியமிக்கும் உள்ளக விசாரணைக் குழுக்கள் மீது, தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை' என்றார்.

'மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளை மறுத்து, அதனை நிராகரித்திருந்து. தற்போதைய அரசாங்கமும் தாங்கள் ரோம் உடன்படிக்கையில் கையொப்பமிடவில்லை. என கூறியிருக்கிறது. முன்னைய அரசாங்கத்தின் ஊழல்களை விசாரிக்கும் இந்த ஆட்சியாளர்கள், முன்னைய அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

மாறாக தாங்களும் உள்ளக விசாரணை ஒன்றை நடத்தப்போவதாக கூறியிருக்கின்றார்கள். இதில் முதன்மையான விடயம் உள்ளக விசாரணைகள் மீது நம்பிக்கை கொள்வதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை என்பதாகும். அதனை கடந்த கால அனுபவங்கள் மூலமாக நாங்கள் உணர்ந்திருக்கின்றோம்' என்றார்.

'எங்களுடைய பிரச்சினைகளை மையப்படுத்தியதாக பல விசாhரணைக் குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட போதும் அவற்றின் முடிவுகள் என்னவானது? தமிழ் மக்களுக்கு என்ன நியாயம் கிடைத்தது? என்பது தொடர்பில் தமிழ் மக்கள் அனுபவத்தினூடாக அறிந்திருக்கின்றார்கள். போர் நிறைவடைந்த பின்னரும் இலங்கை அரசாங்கம் ஓர் ஆக்கபூர்வமான விசாரணையை ஆரம்பித்து குற்றவாளிகளை தண்டிக்காத நிலையில், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு தன்னுடைய விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

எனவே இந்த விடயத்தில் தமிழ் மக்கள் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு மூலமாக தமக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகின்றனர். தங்களுடைய இனப்பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் எனவும் உறுதியாக இருக்கின்றனர்' என்றும் அவர் கூறினார்.

'ஆனால், நடைமுறையில் உள்ள சில செயற்பாடுகளை அவதானிக்கின்ற போது இலங்கையில் உருவாகியிருக்கும் ஆட்சி மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா விசாரணைக் குழு தனது அறிக்கையை வெளியிடும் காலத்தை தள்ளிப்போடுவதற்கான முயற்சிகள் நடப்பதாகவே தெரிகின்றது. இதற்கான கோரிக்கையை புதிய அரசாங்கமும் கோரலாம்.
ஆட்சி மாற்றத்தை காரணம் காட்டி சர்வதேச நாடுகளும் அதற்கான ஒப்புதலை வழங்கலாம். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஐ.நா விசாரணைக் குழுவின் அறிக்கை மூலமாகவே தமிழ் மக்களுடைய தேசிய பிரச்சினைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆட்சி மாற்றம் மற்றும் 100 நாள் வேலைத்திட்டம் என பல உருவாக்கப்பட்டாலும் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு அல்லது வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு எதுவித பயனும் கிடைக்காது.

ஒற்றையாட்சிக்குள்ளே தீர்வு, 13ஆம் திருத்தச் சட்டமே தீர்வு எனவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கையில், ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு விசாரணை அறிக்கை வெளியாவதன் மூலம் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையிலான தீர்வு ஒன்று கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். அந்த அறிக்கையின் மூலமாக இங்கே யுத்தம் எதற்காக நடைபெற்றது? எதற்காக மக்கள் கொல்லப்பட்டார்கள்? போன்ற கேள்விகளுக்கான விடைகள் கிடைக்கும்.

எமது நட்பு நாடுகளாகவுள்ள அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் உதவிகளை தொடர்ந்தும் கோருவோம். ஐ.நா அறிக்கை வெளியாவதனை பின்தள்ளிப்போடக்கூடாது. அது தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாகவே அமையும்' என்று சுரேஸ் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X