2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'கோயில்கள் இடிக்கப்பட்டு விகாரைகள் கட்டப்படுகின்றன'

George   / 2015 பெப்ரவரி 04 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்


வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதியிலிருந்த எங்கள் கோயில்கள் இடிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. நாங்கள் குடியிருந்த வீடுகள் தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளன என மயிலிட்டி மக்கள் பிரதிநிதி ஒருவர் கவலை தெரிவித்தார்.

யாழ். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் 'இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சிக்கான மக்கள்' கலந்துரையாடல் நாவலர் கலாசார மண்டபத்தில் புதன்கிழமை(04) இடம்பெற்றபோது, அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஆட்சி காலத்தில் இருந்தது போலவே நாம் இன்றும் வாழ்கின்றோம் இந்த ஆட்சி மாற்றத்தினால் நாம் எதனையும் புதிதாக பெற்றுக்கொள்ளவில்லை. உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மயிலிட்டி கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு செவ்வாய்க்கிழமை(03) சென்று வழிபாடுகளை நடத்தி பொங்கல் செய்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்து இருந்தனர்.

கடந்தமுறை தைப்பூச தினத்தன்று இந்தக் கோயிலுக்கு சென்ற போது, அங்கு இருந்த பிள்ளையார் கோவில் தற்போது இடித்து அழிக்கப்பட்டு அந்த கோயில் இருந்த இடத்தில் பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

கடந்தமுறை இருந்த எங்கள் உறவினர் ஒருவரின் வீடும் இடித்தழிக்கப்பட்டு விடுதி கட்டியுள்ளார்கள். அதேபோன்று கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை கோயிலுக்கு செல்ல அனுமதித்து இருந்த காலப்பகுதியில் எங்களுடைய வீடுகள் சிறிய சேதத்துடன் இருந்தன.

தற்போது அந்த வீடுகள் மற்றும் கோயில்கள் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டு மண் மேடாக காட்சியளிக்கின்றன.

அச்சுவேலி - தொண்டைமனாறு வீதி வழியாக நாங்கள் போக்குவரத்து செய்ய முடியாதவாறு தடை செய்து வைத்துள்ள இராணுவத்தினர், தென்னிலங்கை சுற்றுலா பயணிகளை மட்டும் அந்த வீதியை பயன்படுத்த இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் ஊடாக நாம் எமது சொந்த ஊர்களுக்கு செல்லலாம் என நினைத்து இருந்தோம்.இந்த ஆட்சி மாற்றத்திலும் அது சாத்தியப்படும் என்ற நம்பிக்கையும் தற்போது இல்லாமல் போகின்றது என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .