2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அளவெட்டி, மல்லாகம் பகுதி கிணறுகளில் கழிவு எண்ணெய் இல்லை

Menaka Mookandi   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

கழிவு எண்ணெய் கசிவு உள்ளதாகக் கூறப்பட்ட அளவெட்டி மற்றும் மல்லாகம் பகுதிகளிலுள்ள கிணறுகளில் தற்போது எண்ணெய் கசிவு காணப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

சுன்னாகம் மின்சார நிலைய வளாகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெயால் சுற்றுப்புறத்திலுள்ள கிணறுகளில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்த எண்ணெய் கசிவானது மல்லாகம், அளவெட்டி எனப் பரந்து, வலிகாமம் மேற்கு வரையிலும் பரவியதாகக் கூறப்பட்டது.

அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அமைப்புக்கள் சில, அது எண்ணெய் கசிவு எனவும் அது தொடர்ந்தும் பரவிக்கொண்டிருப்பதால் கிணறுகளிலுள்ள நீரைப் பாவிக்க வேண்டாம் என அறிவுரை கூறின.

கிணறுகளை ஆய்வு செய்த வடமாகாண சபையின் நிபுணர் குழு, மின்சார நிலையத்துக்கு அருகிலுள்ள கிணறுகளில் மாத்திரம் எண்ணெய்க் கசிவு காணப்பட்டதாகவும் எஞ்சிய இடங்களில் எண்ணெய்க் கசிவுகள் இல்லையென்பதையும் உறுதிப்படுத்தின. இந்த குழப்ப நிலையில், மிகுதி கிணறுகளில் காணப்படும் எண்ணெய்ப் படலங்கள் தொடர்பில் மக்களிடையே சந்தேகங்கள் ஏற்பட்டன.

இது தொடர்பில் வடமாகாண சபை நிபுணர் குழு விளக்கமளிக்கையில், 'கடந்த ஆண்டு கடுமையான வெப்பம் நிலவியமையால் நீரிலுள்ள கல்சியமானது உருகி எண்ணெய்ப் படலமாக தோன்றுகின்றதாகவும் அதற்கு மேலாக மரங்களிலிருந்து கிணறுகளுக்குள் வீழ்ந்துள்ள இலைகளிலுள்ள ஓரளவு எண்ணெய் தன்மையுள்ளதாகவும்' கூறின.

வடமாகாண சபையின் இந்தக் கூற்றை ஒரு தரப்பினர் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், மிகுதி தரப்பினர் அதனை மறுத்து எண்ணெய் கசிவு கிணறுகளில் காணப்படுவதாக வலியுறுத்தி வந்தனர்.

எது எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட பகுதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு தாங்கிககள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இதனை பிரதேச சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் மாவட்டச் செயலகம் ஆகியன இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
 
இந்நிலையில், எண்ணெய்க் கசிவு உள்ளதாகக் கூறப்பட்ட அளவெட்டி மற்றும் மல்லாகம் பகுதிகளில் கசிவுகள் தற்போது இல்லை. அந்தக் கிணறுகளிலுள்ள நீரை மக்கள் இன்னமும் குடிநீருக்குப் பயன்படுத்தவில்லை. இருந்தும் பரிசோதனைகள் மூலம் எண்ணெய் கசிவு இல்லையென்பதை உறுதிப்படுத்திய பின்னர் அந்நீரை பருகுவதற்கு தயாராகவிருப்பதாக மக்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .