2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வளலாய், இடைக்காடு பகுதிகளில் 24 வருடங்களின் பின் மீள்குடியமர்வு: யாழ். அரச அதிபர்

A.P.Mathan   / 2011 நவம்பர் 23 , பி.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ். கோப்பாய் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வளலாய், இடைக்காடு பிரதேசங்களில் கடந்த 24 வருடங்களின் பின்னர் மீள்குடியமர்வு இடம்பெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இதுதொடர்பாக மேலும் கூறுகையில்...

வளலாய், இடைக்காடு பகுதிகளிலிருந்து யுத்த சூழ்நிலையால் இடம்பெயர்ந்த சுமார் 300 குடும்பங்களை எதிர்வரும் 29ஆம் திகதி அப்பகுதியில் மீள்குடியேற்றவுள்ளோம். இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள குறித்த பிரதேசங்களை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க எதிர்வரும் 29ஆம் திகதி காலை 10.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக எம்மிடம் கையளிக்கவுள்ளார்.

வளலாய், இடைக்காடு போன்ற பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த சென்றவர்களின் விபரங்களை திரட்டி வருகின்றோம். இதுவரை பிரதேச சபையில் பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் மீள்பதிவு செய்வதற்காக பிரதேச சபையினை சனி, ஞாயிறு தினங்களிலும் திறந்து வைக்குமாறு பணித்துள்ளேன். இதனால் இதுவரை காணிகளை பதிய முடியாமல் போனவர்கள் இலகுவில் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

இதேவேளை யாழில் காணிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பல்வேறுபட்ட சிக்கல்கள் நிலவுகின்றன. இதனை திரிவுபடுத்தியும் செய்திகள் வெளிவருகின்றன. ஆகையினால் உண்மை நிலையினை கண்டிப்பாக அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

யாழிலிருந்து தனிக் குடும்பமாக இடம்பெயர்ந்து சென்ற பலர் இன்று பல குடும்பங்களாக வந்து அனைவருக்கும் இடம் ஒதுக்கித்தருமாறு கேட்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் எப்படி இடம் ஒதுக்கிக் கொடுக்க முடியும். இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.

நாவாந்துறை, குருநகர், பாசையூர் போன்ற குறிப்பிட்ட பிரதேசங்களில் 4 அல்லது 5 பேர்ச் காணியில் குடியிருந்த பலர் இன்று எம்மிடம் வந்து நான்கைந்து குடும்பங்களுக்கு வீடு கட்டித் தருமாறு கேட்கின்றனர். இது சாத்தியமில்லாத விடயம். யாழில் வீட்டுத் தேவை என்பது பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. சுமார் 60 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாக இருந்தபோதிலும் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு மாத்திரமே வீடுகளை வழங்கக்கூடிய சூழ்நிலை தற்சமயம் இருக்கின்றது. அதில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் நிவாரணம் பெறக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.

இந்நிலையில் எஞ்சியுள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிரந்தர வதிவிடங்களை வழங்குவதற்கே நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் சில குடும்பங்கள் தங்கள் அனைத்து குடும்பத்திற்கும் வீடு வழங்கவேண்டும் என்று கேட்பது நியாயமன்று.

ஜனாதிபதி செயலணிக்குழுவின் செயலாளர் அண்மையில் எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் காணிகளை பெற விண்ணப்பிப்பவர்கள் தங்களின் அனுமதி பெற்றே காணிகளை பெறமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையினால் எங்களால் நினைத்ததைப்போன்று காணிகளை ஒருவருக்கும் வழங்கிவிட முடியாது.

தயவுசெய்து யாழில் காணிகளை பெற விண்ணப்பிக்க முன்னர் இந்த நடைமுறைகளையும் பின்பற்றுவரு சாலச்சிறந்தது. அதேவேளை, இன்னமும் மீளக்குடியேற்றப்படாமல் இருக்கின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களையும் கூடிய விரைவில் மீள்குடியேற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் என்றும் யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .