2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

கொழும்புத்துறை வசந்தபுரம் மக்களை 6 மணிக்கு முன் வெளியேற உத்தரவு

Super User   / 2010 ஒக்டோபர் 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதி மக்களை இன்று மாலை 6 மணிக்கு முன்னதாக அப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அப்பகுதி படையதிகாரி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரே போனாலும் தாம் தமது சொந்த இடத்தை விட்டுப் போகப்போவதில்லை என்று அங்கு மீள்குடியேற வந்துள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவந்துள்ளதாவது:

நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழல் காரணமாக 1995ஆம் ஆண்டு இப்பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் பின்னர் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த இப்பிரதேசம், கடந்த மார்ச் மாதமளவில் மக்கள் மீள்குடியேற்றத்துக்காக விடப்பட்ட நிலையில் இதுவரை மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இப்பகுதி மக்கள் தாமே குடியேறும் நோக்கில் இங்கு வந்து சேர்ந்துள்ளனர்.

பல தடவைகள் தம்மை மீள்குடியேற்றுமாறு உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத நிலையில் தாம் இங்கு மீள்குடியமர வந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இப்பகுதியில் மிதிவெடி அபாயம் காணப்படுவதாகவும் இன்று 6 மணிக்கு முன்னர் இங்கிருந்து அனைவரும் வெளியேறவேண்டும் என்று அப்பகுதி படையதிகாரி உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடம் தொடர்பாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரினை தொடர்புகொண்டு 'தமிழ்மிரர்' கேட்டபோது... 'சில ஊடகங்கள் இவ்விடயத்தினை தவறான விதத்தில் பிரசாரப்படுத்தி வருகின்றன. இது முற்றிலும் தவறான கருத்தாகும். நாங்கள் அங்குள்ள மக்களை, அவர்களுடைய நன்மை கருதியே வெளியேற சொல்லியிருக்கிறோம். யுத்தம் நிறைவடைந்த நிலையில் இப்பொழுது பாதுகாப்பு வலையம் என்று ஒன்றில்லை. ஆனால் கண்ணிவெடி அகற்றப்படாத பிரதேசங்கள் இருக்கின்றன. அப்படியான ஒரு பிரதேசம்தான் வசந்தபுரம். இங்கு கண்ணிவெடி முற்றாக அகற்றியதற்கான சான்றிதழை கண்ணிவெடி அகற்றும் அதிகாரிகள் எம்மிடம் இன்னமும் வழங்கவில்லை. அப்படி சான்றிதழ்களை நாங்கள் பெறாமல் மக்களை அங்கு குடியேற்ற முடியாது.

இந்நிலையில்தான் பொதுமக்கள் அத்துமீறி அவ்விடத்தில் குடியேறியிருக்கிறார்கள். கண்ணிவெடி பிரதேசம் என வரையறுக்கப்பட்ட பதாதைகளையும் கழற்றி எறிந்துவிட்டு அங்கு குடியேறியிருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்படப்போவது பொதுமக்கள்தான். எந்த இடத்தில் கண்ணிவெடி இருக்கிறது என்பதை அறியமுடியாதவாறு அடையாளங்களையும் இக்குடியேற்றவாசிகள் அகற்றிவிட்டார்கள். கண்ணிவெடி பிரதேசம் என்ற இடத்தில் குடியேறிய மக்களுக்கு ஆபத்து நிகழ்ந்துவிடும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் அவர்களை அவ்விடத்திலிருந்து வெளியேற உத்தரவிட்டிருக்கிறோம்.

இவ்விடயத்தை சில ஊடகங்கள் திரிவுபடுத்தி, சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரசாரப்படுத்தி வருகிறார்கள். தயவுசெய்து அவர்கள் இந்த யதார்த்த நிலையினை புரிந்துகொள்ள வேண்டும். அநியாயமாக மக்களை மீண்டும் பலிகொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்...' என யாழ். அரச அதிபர் கேட்டுக்கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .