2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’இடமாற்றக் கொள்கையை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவும்’

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வளப் பங்கீடு தொடர்பான பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, மாகாண சபையால் உருவாக்கப்பட்டிருக்கின்ற இடமாற்றக் கொள்கையை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென, சபையின் முன்னாள் கல்வி அமைச்சரும் உறுப்பினருமான த.குருகுலராசா தெரிவித்தார்.

வட மாகாண சபை அமர்வு, ​இன்று (12) நடைபெற்றது.

இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட கல்வி வலயங்களில், ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனால் மாணவர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாகவும் உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் ஆ.புவனேஸ்வரன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

ஆகவே, இதற்கு அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிய உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பில் அமைச்சர் அலட்சியப்போக்கைக் கடைப்பிடிக்காமால் விரைந்து செயற்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டனர்.

இதற்குப் பதிளலித்த அமைச்சர் சர்​வேஸ்வரன்,

பதவியேற்ற காலம் முதல் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் வேறுபாடின்றி மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

இதன்போது, கருத்துத் தெரிவித்த முன்னாள் கல்வி அமைச்சரான குருகுலராசா,

வட மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட வன்னிப் பகுதியின் பல வலயங்களிலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன எனத் தெரிவித்த அவர், அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டியதும் மிக மிக அவசியமான செயற்பாடுகளாக இருக்கின்றன எனவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக, வடக்கு மாகாண சபையால் தயாரிக்கப்பட்டிருக்கின்ற இடமாற்றக் கொள்கைளை அமைச்சு ஏன் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்று வினவிய அவர், ஏனெனில் அந்த இடமாற்றக் கொள்கையை உரிய முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தால் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் வளப் பங்கீடுகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாது அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்றார்.

இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன்,

இடமாற்றக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய புதிதாக நியமிக்கப்படுகின்றவர்களுக்கு அந்தக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்றார்.

மேலும், இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆசிரியர் பிரச்சினைகள் ஏற்படாமல் இருப்பதற்கும் அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் அதிகாரிகள் உள்ளிட்ட சகல தரப்பினர்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .