2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘இதயசுத்தியுடன் செயற்பட்டால் மாவட்டச் செயலரை மாற்ற முடியும்’

க. அகரன்   / 2018 ஏப்ரல் 12 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதயசுத்தியுடன் செயற்பட்டால் வவுனியாவுக்கான பெரும்பான்மையின மாவட்டச் செயலரை மாற்ற முடியும்” என வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகத்தில், நேற்று (11) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இருக்கின்ற பயங்கரவாத தடை சட்டம், அவசரக்காலம் சட்டம் போலவே அதற்கு இணையாக  மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையும் எமக்கு எதிராக செயற்படும் ஒரு அமைப்பாகவே உள்ளது. உண்மையில்  மகாவலி அதிகாரசபை ஒரு இனத்துக்கு மட்டுமானதாக இல்லாமல் ஒட்டுமொத்த மக்களுக்கானதாக மாறவேண்டும் இல்லாவிடில் அப்படி ஒரு அதிகார சபையே தேவை இல்லை.

அதுபோலவே   கடந்த  1983 ஆம் ஆண்டு காலப்பகுதியிலே இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்கள் மீள திரும்பி பற்றைகளாக இருக்கும்  தமது காணிகளை புனரமைக்கும் போது, அதனை  தடுக்கும் செயற்பாட்டை வளவள திணைக்களம் மேற்கொள்கிறது. இது அநீதியான செயற்பாடாக உள்ளது. இவை தவிர்க்கப்பட வேண்டுமானால் கட்சி வேறுபாடுகள், பிரதேச வேறுபாடுகள் இல்லாமல் தமிழ் மக்களில் அக்கறை உள்ள அனைத்து தமிழ் தரப்புகளும் ஒன்றாக இணைந்து செயற்படும் தேவையுள்ளது.

அத்துடன் வவுனியா மாவட்டச் செயலரின் சில செயற்பாடுகள் எமக்கு திருப்தியளிப்பதாக இல்லை. புதுவருட கொண்டாட்டத்தில் கூட இராணுவம் மற்றும் முப்படையினரை முன்னிலைப்படுத்தி  மேற்கொண்டமையானது அவர் பௌத்த சிங்கள சிந்தனையில் இருக்கிறார் என்பதை பார்க்கக் கூடியதாகவுள்ளது. அத்துடன் இவ்விடயத்தில் எமது வன்னி  நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டமைப்பின் தலைமையும்  சரியாக செயற்பட்டிருந்தால்  இங்கு ஒரு சிங்கள மாவட்டச்செயலர் நியமிக்கப்பட்டிருக்க மாட்டார். இப்பொழுது வேண்டுமானாலும் கூட எமது வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களும்  தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும் வினைத்திறனுடன் இதயசுத்தியுடன் அரசுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்தால் தமிழர் ஒருவரை மாவட்டச் செயலராக மாற்றக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன” என்று கூறினார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X