2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

‘இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவோம்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

“அரசியல் உரிமை சார்ந்த விடையங்களில் வருகின்ற அரசாங்கத்துக்கு எங்களால் முடிந்த அனைத்து அழுத்தங்களையும் வழங்கி, இனப் பிரச்சினைக்கான தீர்வை நாங்கள் நகர்த்தி, ஒரு முடிவை எடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய பொறுப்பு மக்களால் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது” எனக் கூறிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், “அதனை செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது” என்றார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (10) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் காலங்களில், தமிழ் மக்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்போடும், தமிழ்த் தேசியத்தோடும் பயணித்து, எங்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு எங்களுடைய இனப் பிரச்சினையை தீர்த்து, அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தொடர்ந்தும் ஆதரவை வழங்க வேண்டும்.

“அதேபோல், மக்களினுடைய அன்றாட பிரச்சினைகள், அத்தியாவசிய பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட வேண்டிய ஒரு கடமைப்பாடும் எங்களிடம் சுமத்தப்பட்டுள்ளது.

“நிச்சையமாக அந்த கடமையை நாங்கள் சரியான முறையில் செய்து முடிப்போம். தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இந்தத் தேர்தலிலே ஒரு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை நாங்கள் உணர்கின்றோம்.

“எதிர் காலத்தில் இந்த வீழ்ச்சிக்கு காரணமான விடையங்களை ஆராய்ந்து, தமிழ் மக்களிடம் இருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அந்நியப்படுத்த முனைகின்ற சக்திகளை இனங்கண்டு, அதற்கான தீர்வை நாங்கள் பரிகாரமாக ஏற்று, செயற்படுத்த வேண்டிய கட்டாயம் எமக்கு உள்ளது.

“தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் பல குறைபாடுகள் இருக்கின்றன.அவை தீர்த்து வைக்கப்பட வேண்டியவை. குறிப்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்வது தொடக்கம், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கென கடந்த காலங்களில் ஒருங்கிணைப்புக் குழு என்று ஒரு குழு செயல்பட்டு வந்தது.

“அது விரிவு படுத்தப்பட்டு, ஒழுங்கான நிர்வாக கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, செயல் வடிவம் கொடுக்கப்பட்டு, எதிர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாத்திரமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால வளர்ச்சியை கொண்டு வர முடியும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X