2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ஈ.பி.டி.பி, முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கின்றது’

Editorial   / 2018 மார்ச் 06 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

- டி.விஜிதா, எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

“அனந்தி சசிதரனின் வீட்டின் மீது கடந்த மாகாண சபை தேர்தல் காலப்பகுதியில் நடாத்தப்பட்ட தாக்குதல் பற்றி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினால் (ஈபிடிபி)  வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதை போன்றது” என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று (06) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை தேர்தல் காலப்பகுதியில் “சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பின்” சட்ட ஆலோசகராக கடமையாற்றியிருந்தேன். 2013 செப்ரெம்பர் மாதம் 19 ஆம் திகதி நள்ளிரவு அனந்தி சசிதரனின் வீட்டைச்சூழ இராணுவப்புலனாய்வாளர்களும் ஆயுதம் தரித்த நபர்களும் நிற்பதாகவும் அவரைப் பாதுகாப்பதுக்காக என்னை உடனடியாக அங்கு வருமாறும் முறைப்பாடு கிடைத்தது. நள்ளிரவு 12 மணியளவில் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தெரிந்தும் எனது கடமையைச் செய்வதுக்காக அனந்தி சசிதரனின் வீட்டிற்குச் சென்றேன்.

அங்கு எங்களை சூழ்ந்துகொண்ட இராணுவ சீருடை தரித்த ஆயுததாரிகளும் ஈபிடிபி ஒட்டுக்குழுவை சேர்ந்த சிலரும் என்னையும் அங்கிருந்த அனந்தியின் ஆதரவாளர்களையும் தாக்கி வெறியாட்டம் போட்டதுடன் நாங்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை ஊரறிந்த உண்மை. இதை இப்போது ஈ.பி.டி.பி மறுக்க முற்படுவது முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதை போன்றது.

நான் காரணமின்றி ஈ.பி.டி.பி மீது குற்றஞ்சுமத்தவில்லை. அவர்கள் செய்ததையே கூறுகின்றேன். நான் அவர்களைப் பற்றி உண்மைக்கு மாறானவற்றை கூறுவதாக அவர்கள் கருதினால் தாராளமாக என்மீது மானநஷ்ட வழக்குத் தாக்கல் செய்யலாம். அவ்வாறு அவர்கள் வழக்குத் தாக்கல் செய்தால், அதை முறைப்படி எதிர்கொண்டு அவர்களுக்கு மானம் இல்லாத காரணத்தால் நஷ்டம் ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க தயாராகவே உள்ளேன்.

நீங்கள் உத்தமர்கள்போல் அறிக்கை விட்டால் மட்டும் நீங்கள் செய்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் ஆக்கல்கள், வன்புணர்வுகள், காட்டிக்கொடுப்புக்களை தமிழ்மக்கள் மறந்துவிடுவர் என்று நினைத்தால் அது உங்கள் அறிவீனமே.

உங்களைப்போல்  பதவிகளுக்காகவும் அதிகாரத்துக்காகவும் அங்கலாய்த்து பொய்யுரைப்பவன் நானல்ல. நான் கண்ட உண்மையை மட்டுமே வெளிப்படுத்தியிருந்தேன். இனியும் வெளிப்படுத்துவேன்.

முடிந்தால் இது பற்றி ஒரு பகிரங்க விவாதம் வைக்கலாம். அப்போது உண்மை புலப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .