2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘ஏமாற்றினார் ஜனாதிபதி’

Editorial   / 2018 ஜூலை 08 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தற்போது ஆட்சியிலுள்ள கூட்டு அரசாங்கம், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது ஏமாற்றி வருகிறது எனவும், அதைப் போன்றே, தன்னுடைய வீட்டுக்கு வந்து, வாக்குறுதி கொடுத்த ஜனாதிபதியும், அதனை நிறைவேற்றாது தங்களை ஏமாற்றியுள்ளாரெனவும், காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவி காசிப்பிள்ளை ஜெ. வனிதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தால், வவுனியாவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டத்தின் 500ஆவது நாளை முன்னிட்டு, நல்லார் கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்னால், நேற்று (08) அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்ததுடன், தேங்காய் உடைத்தும் தீச்சட்டி எடுத்தும் வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதன் பின்னர், யாழ். ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை மாலை நேரத்தில் ஏற்பாடுசெய்து, அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர், “காணாமலாக்கப்பட்டுள்ள எமது உறவுகளை மீட்டுத்தர வலியுறுத்தி, கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நாங்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். இப்போராட்டம் ஞாயிற்றுக்கிழமையுடன், 500ஆவது நாளை எட்டும் நிலையிலேயே, யாழ்ப்பாணத்தில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

தமது சங்கம் ஆரம்பிக்கப்பட்ட போது, நல்லூர் ஆலயத்துக்கு முன்பாகவே போராட்டத்தை மேற்கொண்டிருந்ததால், இன்றும் அங்கு போராட்டத்தை நடாத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இவ்வாறு நாங்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்ற போதிலும், அரசாங்கம், எமது போராட்டத்தைக் கவனத்திலெடுக்காது செயற்பட்டு வருகிறது” என, அவர் குற்றஞ்சாட்டினார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி தனக்கு வாக்குறுதி வழங்கி பல மாதங்கள் கடந்து சென்றிருக்கின்ற நிலையில், அவர் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த அரசாங்கம், தங்களை ஏமாற்றுகின்ற நடவடிக்கைகளையே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனதெனக் குறிப்பிட்ட அவர், ஆகையால் இந்த அரசாங்கம் மீது நம்பிக்கை இல்லை எனவும், சர்வதேச சமூகம் தமக்கான தீர்வைப் பெற்றுத் தர வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, “எங்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகளும், எங்களுடைய பிரச்சினைகளைக் கவனிப்பதில்லை” என, அவர் மேலும் விமர்சனத்தை வெளிப்படுத்தினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .