2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முறுகலுக்கு முடிவு

Editorial   / 2017 ஜூன் 20 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

 

வடமாகாண விவகாரம் தொடர்பில், முட்டியிருந்த முறுகல் நிலையை, முடிவுக்கு கொண்டுவரும் கடிதப் பரிமாற்றங்கள் பற்றி, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தன்தரப்பு நியாயத்தை, ஊடகங்களுக்கத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் இல்லத்தில், நேற்று (19) இரவு 7 மணிக்கு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் உரையாற்றியதாவது:-

'இதுவரை முடிவெடுக்கவில்லை'

“குற்றசாட்டுக்கு உள்ளான அமைச்சர்கள் இருவரின் இடத்துக்கு புதிய அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில், இதுவரை முடிவெடுக்கவில்லை” என்று,  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

 “தற்போதுள்ள நிலைமையை ஸ்திரப் படுத்திய பின்னரே, அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்க முடியும்” என்று அவர் கூறினார்.

'விசாரணைக்குழு சட்டரீதியானது'

“வடமாகாண முதலமைச்சரினால், அமைச்சர்களுக்கு எதிரான குற்றசாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை குழு, சட்ட ரீதியான விசாரணை குழுவே. அமைச்சர்களை விசாரணை செய்த குழு, சட்ட பூர்வமான குழு தான். அதேநேரம்,  இப்பொழுது, மற்றைய இரு அமைச்சர்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியது, வேறு ஒரு குழு. ஏனெனில்,  இந்த அமைச்சர்களின் விசாரணைகளில், வேறு விதமான பின்னணி இருப்பவர்கள் பங்கு பற்ற வேண்டிய காரணம் இருப்பதனால், அதனை மாற்றி அமைக்க இருக்கின்றோம்”

'மீளாய்வு அவசியம்'

“வடமாகாண விவசாய அமைச்சர் மீதான குற்றசாட்டுக்கள் தொடர்பில் மீளாய்வு செய்ய வேண்டிய அவசியம் உண்டு. விவசாய அமைச்சர் என்னுடன் இது தொடர்பாக பேசியுள்ளதோடு, அது தொடர்பில் மீளாய்வு செய்ய முடியுமா என்பதை பரிசீலிக்கின்றேன். ஏனெனில் அவர் கூறுவதில், சில விடயங்கள் இருக்கின்றன. அந்த விசாரணைக் குழு அமைச்சர் துஷ்பிரயோகம் செய்தார் என்பதையும் பண விரயத்தில் ஈடுபட்டார் என்பதையும் கண்டுபிடித்தது. ஆனால் கையாடல் செய்தார் என்று,  எங்கும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

'கடிதம் இன்னும் வரவில்லை'

“குற்றச்சாட்டுக்கு உள்ளான வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, தனது இராஜினாமா கடிதத்தை இன்னமும் ஒப்படைக்கவில்லை. கல்வி அமைச்சர், அவருடைய இராஜினாமா கடிதத்தை தருவதாக,  தொலைபேசியில் குறிப்பிட்டிருந்த போதிலும், அக்கடிதம், இன்னும் என்னை வந்தடையவில்லை. ஆனால், கிடைக்கும் என்று நம்புகின்றேன்”

'சட்டத்துக்கு புறம்பானது'

“வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், நம்பிக்கையில்லா பிரேரணையை , வடமாகாண ஆளுனரிடம் கையளித்தது, சட்டத்துக்கு புறம்பான செயல் என்று நம்புகின்றேன். அவைத்தலைவரின் பங்கு என்ன என்பது தொடர்பில் எமக்கு தெளிவில்லாமல் உள்ளது. அவையில், ஒரு அமைச்சருக்கு எதிராகவோ, முதலமைச்சருக்கு எதிராகவோ, நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவதாக இருந்தால் , அதனை அவைத்தலைவருக்கு தான் கையளிக்க வேண்டும். 

“ஆனால், இங்கே அவைத்தலைவர் தானாக முன் வந்து, தன் பக்கம் சிலரை இழுத்துக்கொண்டு,  ஆளுனரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளித்துள்ளார். அவரது இந்தச் செயற்பாடு, சட்டத்துக்கு புறம்பானது என்றே, நான் நம்புகின்றேன்.

“அவ்வாறு பக்க சார்பாக நடந்து கொண்ட அவைத்தலைவர், தொடர்ந்தும் அந்த பதவியில் நீடிக்கலாமா என்ற கேள்வி எழுகின்றது. அதனை, உறுப்பினர்கள் கலந்துரையாடவுள்ளதோடு விவாதிக்கவும் உள்ளனர். எனவே, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்”


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .