2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘நாடாளுமன்றத்தில் தகுதியானவர்கள் இல்லை’

Editorial   / 2018 ஏப்ரல் 17 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

“நாட்டின் நாடாளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பிரதேச சபைகளில் இருப்பதற்குக் கூட தகுதியானவர்கள் இல்லை” என தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன்; தெரிவித்துள்ளார்.

தேசிய சித்திரை புத்தாண்டு விழா நேற்று (16) யாழ்.கனகரத்தினம் மகாவித்தியாலயத்தில்; நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் உள்ள இனங்களுக்கு இடையில் சக வாழ்வு உருவாக்கப்பட வேண்டும். அவை தேசிய சகவாழ்வு என்று பெரிய பதாகைகளில் எழுதி நாடு முழுவதும் தொங்க விடுவதன் ஊடாக இனங்களுக்கு இடையில் சக வாழ்வு ஏற்பட்டு விடாது.

அல்லது மேடைகளில் மதத்தலைவர்களை அமரச் செய்து இன, மத, மொழி சகவாழ்வை கட்டியேழுப்பிவிட்டோம் என்று கூக்குரல் இடுவதனூடாக சகவாழ்வு வந்துவிடாது. எங்கள் அரசாங்கத்தில் இருக்கும் பலர் இதனையே செய்ய முற்படுகின்றார்கள். இவர்களின் காலாவதியான கொள்கைளை கண்டு நான் வெட்கமும், கவலையும் அடைகின்றேன். நாங்கள் ஆழ்பவர்கள் என்ற திமிர், ஆணவம், அகங்காரம் இருக்கும் வரைக்கும் இந்த நாட்டில் மட்டுமல்ல எந்த நாட்டிலும் சமத்துவம் ஏற்படுத்தப்பட முடியாது.

நாங்கள் நினைப்பது போல சிங்கள மக்கள் மத்தியிலே இனவாத அரக்கன் குடிகொண்டிருக்கவில்லை. அந்த இனவாத அரக்கன் அரசியல்வாதிகளிடத்தில்தான் இருக்கின்றது. தமிழ் அரசியல்வாதிகள் தமது தேவைக்காக எவ்வாறு தமிழ் இனவாதத்தை தூண்டிவிடுகின்றார்களோ, அதே போன்று சிங்கள அரசியல்வாதிகளும் தமது தேவைகளுக்காக சிங்கள இனவாதத்தை தூண்டிவிடுகின்றார்கள். முஸ்லிம் மக்கள் மத்தியிலும் இவ்வாறான அரசியல்வாதிகள் உள்ளார்கள்.

நாட்டின் நாடாளுமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்களில் அரைவாசிக்கு மேற்பட்டோர் பிரதேச சபைகளில் இருப்பதற்குக் கூட தகுதியானவர்கள் இல்லை. ஆனால் நாடாளுமன்றத்துக்கோ, மாகாண சபைகளுக்கோ அல்லது, பிரதேச சபைகளுக்கோ செல்லவிரும்பாத மிகப் பெரும் செயற்பாட்டாளர்கள் நேர்மை, துணிச்சல், அர்ப்பணிப்பு, தூரநோக்கு கொண்ட பலர் சிவில் சமூகத்துடன் இணைந்து செயற்படுகின்றார்கள்.

குறிப்பாக வடக்கில் உள்ள சிவில் சமூகம் பல துன்பங்கைள கண்டு, ஏராளமான சவால்களை வெற்றி கொண்ட எமது சமூகமாக உள்ளது.

அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும், ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும், பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களிலே மற்றும் ஏனை அமைச்சுகளின் கூட்டங்களிலே தேசிய சிவில் சமூகத்திற்கும் உரிய அந்தஸ்து வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றேன். இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் பேசியுள்;ளேன். மிக விரையில் அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் வெளியிடப்படும் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X