2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பலமான தமிழ் கட்சி உருவாகுவதை ஐ.தே.க விரும்பாது’

Editorial   / 2018 ஏப்ரல் 16 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்


“தமிழ் மக்களின் ஆதரவுடன் பலமான தமிழ்க் கட்சியோ அல்லது தமிழ்த் தலைமையோ உருவாகுவதை ஐக்கிய தேசியக் கட்சி எப்போதுமே விரும்பாது என்று குற்றம் சுமத்தியுள்ள அமைச்சர் மனோகணேசன் அவ்வாறு உருவாகினால் அக் கட்சியோ அல்லது அதன் தலைமையோ தங்களுக்குச் சார்பாக இருக்கவேண்டுமென்பதே அவர்களது எதிர்பார்ப்பு” என தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைமைகள் குறித்து யாழ் ஊடக அமையத்தில் நேற்று (15) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு எதையும் செய்யவில்லை என்றோ அல்லது எல்லாம் செய்துள்ளது என்றோ கூற முடியாது. அதேநேரம் நல்லாட்சி அரசு தொடர்பில் நானும் சிலவற்றை பகிரங்கமாகவே கூறியிருக்கின்றேன். ஆனாலும் அவர்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்பவே செயற்பட்டு வருவது தெளிவாகியிருக்கின்றது.
குறிப்பாக என்னுடைய அமைச்சின் கீழ் தேவையற்ற தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தேன். 
இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சை என் அமைச்சின் கீழ் தருவதாக அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருந்தார்.
ஆனால் அதன் போது தலையிட்ட அமைச்சர் மங்கள சமரவீர அந்த அமைச்சு துறையை ஜனாதிபதியே வைத்திருப்பது நல்லது என கூறியிருந்தார். மேலும் அதுவே சர்வதேசத்தின் கவனத்தினை கொண்டிருக்கிறது எனவும் கூறினார். இதனையடுத்து நான், அமைச்சர் மங்களவுக்கு, சர்வதேசத்தின் கவனத்தை கொண்டிருப்பது முக்கியமல்ல, சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கூறியிருந்தேன்.
இதேவேளை தேசியக் கட்சிகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தான் தமிழ் மக்களின் ஆதரவு இருக்கின்றது. அதனால் பலமான தமிழ்க் கட்சிகள் வருவதையோ அல்லது தலைமைகள் வருவதையோ அந்தக் கட்சி விரும்பாது. இருந்தும் ஒரு பலமான தமிழ் கட்சி உருவானாலும் அந்த கட்சி தமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். இதனைக் கூறுவதற்கு அச்சப்படவில்லை” என தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .