2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மண்டைதீவில் போராட்டம்

Niroshini   / 2021 ஜனவரி 18 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் - மண்டைதீவு பகுதியில் உள்ள  பொதுமக்களின் காணிகளை சுவிகரிப்பதற்கு எதிராக, பாரிய போராட்டமொன்று, இன்று முன்னெடுக்கப்பட்டது.
போராட்டக்களத்தில், பொலிஸார் குவிக்கப்பட்டதால், அப்பகுதியில் பெரும் பதற்றமும் ஏற்பட்டிருந்தது.

மண்டைதீவு - ஜே107 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 29 பேரின் 18 ஏக்கர் பரப்பு காணி சுவிகரிப்பதற்காக, நில அளவைத் திணைக்களத்தினரால் காணி அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, காணி அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் அரசியல்வாதிகளும் அங்கு திரண்டிருந்தனர்.

இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு போது, நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் காணிகளை அளவீடு செய்வதற்கு வருகை தந்திருந்தனர்.

இதன் போது, காணிகளை அளவீடு செய்ய கடும் எதிர்ப்பு வெளிப்படுத்திய நிலையில், காணிகளை அளவீடு செய்யாமலே நில அளவைத் திணைக்களத்தினர் திரும்பிச் சென்றிருந்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் செல்ல தயாரான நிலையில, பொலிஸ் பாதுகாப்புடன் நில அளவை திணைக்கள அதிகாரிகள் மீண்டும் அங்கு வந்து காணிகளை அளவீடு செய்ய போவதாக அறிவித்தனர்.

ஆயினும், காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்க முடியாதென்று எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களும் அரசியல் பிரமுகர்களும் காணிகளின் உரிமையாளர்களும்  வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அப்பகுதியில்  பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதன் பின்னர் அங்கு வருகை தந்த வேலணை பிரதேச செயலாளர சோதிநாதன், இங்குள்ளவர்களின் எதிர்ப்பு காரணமாக காணி அளவிடுவதை நிறுத்துவதாகவும் காணி அமைச்சுடன் இது குறித்து பேசி, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அதுவரையில் காணி அளவீடு மேற்கொள்ளபடாதென்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, நில அளவை திணைக்களதினரும் பொலிஸாரும் திரும்பி சென்றனர். இதன் பின்னர் அங்கு நின்றிருந்த மக்களும் அரசியல்வாதிகளும் சென்றனர்.

இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகிய 4 தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றாக இணைந்து, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .