2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’மாகாண சபை தொடர்பான சட்டத்திருத்தத்தை எதிர்க்க வேண்டும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

 

“மாகாண சபைகளை நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான புதிய சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுமாக இருந்தால், அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்க வேண்டும்” என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

 

சுரேஸ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் இன்று (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடாத்துவது என்ற பெயரில், மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திவைக்கும் முகமாக புதிய சட்டத்திருத்தம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவர இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அடுத்து ஓரிரு மாதங்களில் கிழக்கு மாகாண சபையின் காலம் முடிவடைந்து கலைக்கப்படவிருக்கின்றது. இதேபோல் ஏனைய இரண்டு மாகாண சபைகளும் கலைக்கப்படவிருந்தது. அதன் தேர்தல்களை, எதிர்வரும் நவம்பர் மாதம் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டது. தற்போது அதனை நடாத்தாது ஒத்திவைக்க தீர்மானித்துள்ளனர்.

இலங்கையில் மாகாண சபை உருவாக்கப்பட்டமை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைக்குத் தீர்வை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது.

ஜனநாயக விரோதமான முறையில் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் மாகாண சபைகளை அரசாங்கம் வைத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதற்காக சட்டமூலம் கொண்டு வர ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது.

தொடர்ச்சியாக மாகாண சபைக்குரிய நடவடிக்கைகளை நாடாளுமன்றமே மேற்கொள்ளுகின்ற சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாக சந்தேகம் பொது மக்கள் மத்தியில் ஏற்படுகின்றது.

இதனால்தான் தேர்தல்கள் நிராகரிக்கப்பட்டு, அதிகாரங்கள் ஆளுநர் கையிலும் அதிகாரிகள் கையிலும் செல்ல வாய்ப்புக்கள் உள்ளன. அவ்வாறு செல்லுமாக இருந்தால் தமிழ் மக்களுக்கான ஜனநாயகம் பறிக்கப்பட்டு விடும்.

எமது அபிவிருத்தியை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மிக நீண்ட காலம் போராடி அற்ப சொற்பமாக வந்த அதிகாரங்களை அரசாங்கம் பறித்தெடுத்து தாம் இதை கொண்டு நடாத்துமாக இருந்தால் அவ்வாறான சூழலை ஏற்படுத்தப்பட முடியாது. அதனை நாம் எதிர்ப்போம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதனை எதிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .