2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘வழக்குகளை இடம் மாற்றுவது நீதிமன்றங்களை அவமதிப்பதாகும்’

Editorial   / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச சாட்சிகளுக்கு பாதுகாப்பில்லை என்ற போர்வையில் வழக்குகளை இடம் மாற்றுவது தமிழ்ப் பகுதிகளில் இயங்கும் நீதிமன்றங்களை அவமதிப்பதாகும் என தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் சிவில் சமூக அமையம் இன்று (10) அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“தமிழ் அரசியல் கைதிகள் மூவருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு எதிரான வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், அவ்வழக்குகள் கடந்த மாதம் அநுராதபுரத்துக்கு சட்டமா அதிபரால் மாற்றப்பட்டுள்ளன. இதற்கு எதிராக அக்கைதிகள் உணவுத் தவிர்ப்பு போராட்டமொன்றை நடாத்தி வருகின்றனர். அவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது.

இக்கைதிகளுக்கு எதிராக சாட்சியளிக்க அடையாளம் காணப்பட்டோர் தமக்கு வவுனியாவில் பாதுகாப்பு இல்லை எனக் கருத்துவதாலேயே அநுராதபுரத்துக்கு வழக்கு மாற்றப்பட்டதாக சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார். இந்த விளக்கம் அடிப்படைகளற்றது. யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், வவுனியாவில் அரச சாட்சிகளை அச்சுறுத்தலுக்குள்ளாக்குவது யார் என்பதை சட்ட மா அதிபர் தெளிவுபடுத்த வேண்டும். அரச சாட்சிகளுக்கு வவுனியாவில் பாதுகாப்பு கரிசனை உள்ளது என்பது நம்பமுடியாத ஒரு நொண்டிச் சாட்டு. வடக்கு, கிழக்கில் அரசியல் கைதிகளின் வழக்குகள் இடம்பெறக் கூடாது என சட்ட மா அதிபர் திணைக்களம் கருத்துகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

வவுனியாவில் வழக்கை நடாத்த பாதுகாப்பில்லை என்ற நிலைப்பாடு ஒரு நாடு ஒரே சட்டம் என்ற முழக்கத்தை நகைப்புக்குரியதாக்குகின்றது. இந்த நாட்டின் தமிழ் குடிமக்கள் மட்டுமல்ல தமிழ் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களும் இரண்டாம் தரமாக கணிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகின்றது.  சட்ட மா அதிபருக்கு குற்றவியல் வழக்குகளை நடத்துவதில் உள்ள தற்துணிவு அதிகாரங்கள் எல்லைகளற்றவையல்ல. சட்ட மா அதிபர் திணைக்களம் சட்டத்தின் ஆட்சியையும் வடக்கு கிழக்கில் நீதிமன்றங்களின் சுயாதீனத்தையும் உறுதிப்படுத்தும் பொறுப்புடையவர்கள். உடனடியாக வவுனியாவுக்கு இவ்வழக்குகளை மீள இடம் மாற்றுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் சட்ட மா அதிபரை இவ்விடயம் தொடர்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படும் எனும் பொதுவான நிலைப்பாட்டை தமிழ் சிவில் சமூக அமையம் மீள வலியுறுத்துகின்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .