2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகள் மேன்முறையீடு

எம். றொசாந்த்   / 2017 ஒக்டோபர் 11 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் சார்பாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளும் குற்றவாளிகளின் சட்டத்தரணிகளும் தனித்தனியாக யாழ். மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஏழு குற்றவாளிகளுக்கான மரண தண்டனைத் தீர்ப்புக்கெதிராக போகம்பறை சிறைச்சாலையின் அத்தியட்சகர், பதிவுத் தபாலில் மேன்முறையீட்டு மனுவை அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை, வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளி சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் மற்றும் அவரது சகோதரன் சசீந்தரன் சார்பில் சட்டத்தரணி மேல் முறையீடு செய்துள்ளார்.

யாழ். மேல்நீதிமன்றத்துக்கு கிடைத்துள்ள இந்த மேன்முறையீட்டு மனுக்கள் தொடர்பில், ட்ரயல் அட் பார் நீதிபதிகளுக்கு அறிவிக்கப்படவுள்ளது. இதன்பின்னர் உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமுக்கு குறித்த மேன்முறையீட்டு மனு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

குற்றவாளிகளுக்கு, ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தூடாக மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் மேன்முறையீட்டு மனு உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு, ட்ரயல் அட் பார் முறையில் விசாரணைகள் நடைபெற்று, ஒன்பது எதிரிகளில் ஏழு பேரை, தீர்ப்பாயம் குற்றவாளிகளாக இனங்கண்டு, கடந்த மாதம் 27 ஆம் திகதி மரண தண்டனைத் தீர்ப்பளித்ததுடன், 30 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .