2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

'வட மாகாண சபையின் தவறான முடிவுகள் வேதனையானது'

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 25 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன்

12 வலயங்களின் கல்விப் பணிப்பாளர்களினதும் கருத்துக்களைப் புறந்தள்ளி வடக்கு மாகாணசபை தவறான முடிவுகளை எடுப்பது மிகவும் வேதனைதரும் விடயமாக உள்ளது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணத்தில் 1,064 மாகாணப் பாடசாலைகளும் 22 தேசிய பாடசாலைகளும், 06 தனியார் பாடசாலைகளுமாக மொத்தம் 1,092 பாடசாலைகள் உள்ளன.

இவற்றில் 1ஏபி பாடசாலைகள் 103உம், 1சி பாடசாலைகள் 117உம்,  2ஆம் தர தரப்பாடசாலைகள் 319உம்,  3ஆம் வகைப் பாடசாலைகள் 460 உம் உள்ளன.

தற்போது 388 ஆசிரியர்களுக்கு தரம் 3 அதிபர் நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது.

வடக்கு மாகாணத்தில் 424 அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர் வெற்றிடங்கள் உள்ளன. அதிபர் வெற்றிடம் 220 உள்ளது. பிரதி அதிபர், உதவி அதிபர் வெற்றிடம் 133 உள்ளது. பதில் அதிபர்கள் 71பேர் உள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களிலும் யாழ்ப்பாணம், வடமராட்சி ஆகிய கல்வி வலயங்களில் அதிகமான ஆசிரியர்கள் அதிபர் பரீட்சையில் சித்திபெற்றனர்.

அதேவேளை மேற்குறித்த கல்வி வலயங்களில் வெற்றிடப் பாடசாலைகள் குறைவாகவே உள்ளன. வெற்றிடப்பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகமாக வன்னிப் பிரதேசத்திலேயே உள்ளன.

சித்திபெற்ற அதிபர்களில் கணிசமானோர் க.பொ.த உயர்தர வகுப்புகளில் கல்வி கற்பிப்பவர்கள். பட்டதாரி ஆசிரியர்கள். இவர்களில் 150ற்கும் மேற்பட்டவர்கள் பாடசாலை அதிபர் கடமையைவிட தமது பாடத்துறையைக் கற்பிக்கும் நோக்கில் பிரதி அதிபர், உதவி அதிபர் பதவிகளை எழுத்துமூலமாக கோரியுள்ளனர். இவர்களில் 70 பேர் வலிகாமம் கல்வி வலயம் சார்ந்தவர்கள்.

16 அதிபர்கள் கடமைநிறைவேற்றும் பணியில் இருந்து அதிபர் தரம்-3 கிடைக்கப்பெற்றுள்ளனர். இவர்களுள் இன்னும் சிலருக்கு கல்வி நிர்வாக சேவை நியமனம் கிடைத்துள்ளது.

இத்தகைய புள்ளிவிவரங்களுக்கு அப்பால் தற்போது நியமனம் கிடைக்கப்பெற்ற அதிபர்கள் 3ஆம் வகைப் பாடசாலைகளுக்கே அதிபர்களாக நியமிக்கப்பட வேண்டியவர்கள். மேலதிகமாக  1ஏபி பாடசாலைகளுக்கும், 1சி பாடசாலைகளுக்கும், 2ஆம் தரப்பாடசாலைகளுக்கும் பிரதி அதிபர்களாகவும், உதவி அதிபர்களாகவும் நியமிக்க தகைமை உடையவர்கள்.

இத்தகைய நிலை எவற்றையும் புரிந்துகொள்ளாமல் கல்வி அமைச்சரினதும், கல்வி அமைச்சு செயலாளரினதும், மாகாணக் கல்விப் பணிப்பாளரினதும், 12 வலயங்களின் கல்விப் பணிப்பாளர்களினதும் கருத்துக்களைப் புறந்தள்ளி வடக்கு மாகாணசபை தவறான முடிவுகளை எடுப்பது மிகவும் வேதனைதரும் விடயமாக உள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள 12 வலயக் கல்விப் பணிப்பாளர்களும் கடமை நிறைவேற்றும் பணியில் உள்ளவர்கள். பெருமளவான பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் கடமைநிறைவேற்றும் பணியில் உள்ளவர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் பலர் கடமைநிறைவேற்றும் பணியில் உள்ள அதிபர்கள். உதவிக்கல்விப் பணிப்பாளர்களில் 90 சதவிதமானவர்கள் கடமைநிறைவேற்றும் பணியில் உள்ள ஆசிரியர்கள். இதைவிட வடமாகாணக் கல்வித்திணைக்களத்தில் கூட ஆசிரிய வகைசார்ந்த பலர் பணிப்பாளர்களாக உள்ளனர்.

இதனைப் புரிந்துகொள்ளாத மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் துஸ்டர்களுக்குப் பக்கபலமாக நின்று போராட்டங்களைத் தூண்டிவிடுவது ஆரோக்கியமானது அல்ல. இதைவிட வடக்கு மாகாணத்தின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொண்டு சபையின் எகோபித்த முடிவுகளைச் சபை ஊடாக வெளியிடவேண்டும். அதுமட்டுமன்றி கல்வி தொடர்பான விடயங்களில் மிகுந்த கரிசனையுடன் நடந்துகொள்ள வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .