2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மனித சக்தியில் இயங்கும் உலகின் முதல் வான்கலம்

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மனித சக்தியால் இறக்கையை அசைத்து தொடர்ச்சியாக பறக்கக் கூடிய விமானம் ஒன்றை முதன் முதலில் இயக்கி  புதிய வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், பொறியியலாளர்களினதும் கண்டுப்பிடிப்பாளர்களினதும் பல நூற்றாண்டு கால கனவு தற்போது நனவாகியுள்ளது.

இத்தாலிய  ஓவிய, சிற்பக் கலைஞர் லியானார்டோ டாவின்சி - 1485ஆம் ஆண்டு  “ஓர்னிதோப்டர்” எனும் வான் கலத்திற்கான வரைபடத்தை வரைந்தார். அப்போதிருந்து  மனிதர்கள் பறவைகளைப் போல் இறக்கை அசைத்து பறப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் ஸ்னோபேர்ட் (பனிப்பறவை) எனப் பெயரிடப்பட்ட   மனிதசக்தியால் தொடர்ச்சியாக இறக்கை  அசைத்துப் பறக்கும் வான்கலமொன்று அண்மையில் கனடாவில் இயக்கிக் காண்பிக்கப்பட்டது.

டொரொன்டோ பல்கலைகழகத்தின் வான்பொறியியல் துறையில் பி.எச்.டி. பட்டம் பெற்ற மாணவர் டொட் ரெய்ச்சர்ட் இவ்விமானத்தில் பயணம் செய்தார். இவ்விமானமானது மிகவும் உயரத்தில், கீழே வீழ்ந்து விடாமல் பயணித்ததுடன் 19.3 விநாடிகளுக்கு 145 மீற்றர் தூரம் பறந்தது. அதனது சராசரி வேகம் மணித்தியாலயத்திற்கு 25.06 கிலோமீற்றர்களாகும்.

அவர் சைக்கிள் இயக்குவதைப்போல் விமானத்தின் இறக்கையை தனது கால்களால் உந்தி, இயக்கிச் சென்றார். விமானத்தின் இறக்கை கயிறுகளாலும் கப்பிகளாலும் உந்துவிசைக் கருவியுடன் இணைக்கப்பட்டிருந்தன.

நீண்டகால வான்பொறியியல் கனவுகளை ஸ்னோபேர்ட் பிரதிபலிக்கிறது என்று இச்செயற்திட்டத்தின் முகாமையாளரான ரெய்ச்சர்ட் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் எண்ணிக்கையற்ற ஆண்களும் பெண்களும் தங்களது சொந்த சக்தியை பயன்படுத்தி பறவைகளைப் போல பறந்து பார்க்க வேண்டும் என்று கனவுகள் கண்டனர். அவர்களில் ஆயிரக் கணக்கானோர் இல்லாவிடினும்  நூற்றுக்கணக்கானோர் முயன்று பார்த்திருப்பார்கள். வான்கலங்களின் வரலாற்றில் “முதல் சாதனைகளில்” ஸ்னோர்பேர்ட் விளங்குகிறது என அவர் கூறினார்.

ஸ்னோபேர்ட்டின் நிறை சுமார் 94 இறாத்தல்களாகும். அதனது சிறகுகள் நீளம் 105 அடிகளாகும். போயிங் 737 ரக விமானத்தின் இறக்கை நீளத்தை இது கொண்டிருந்தாலும் போயிங் பயணிகள் விமானத்திலுள்ள தலையணைகளின் மொத்த எடையையே ஸ்னோபேர்ட் கொண்டுள்ளது.

விமானி ரெய்ச்சர்ட் இந்த விமானத்தில் பறப்பதற்காக தனது உடலை 18 இறாத்தல்களால் குறைத்திருந்தார்.  

இச்சாதனையை பதிவு செய்வதற்கான உத்தியோகப்பூர்வ கோரிக்கை  இந்த மாதம் விடுக்கப்பட்டது. வான்கல விளையாட்டுக்கள் மற்றும் வான்கல சாதனைகளை நிர்வகிக்கும் சர்வதேச விமானவியல் சம்மேளனத்தின் (எவ்.ஏ.ஐ)  ஒக்டோபர் மாதக் கூட்டத்தின்போது உலகின் முதலாவது “ஓர்னிதோடப்டராக” இவ்வான்கலம் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விமானம் நடைமுறை ரீதியில் போக்குவரத்துக்கு உகந்ததாக மாட்டாது. எனினும் மனிதர்கள் தமது கனவுகளை நிறைவேற்றுவதற்கு தமது உடல் சக்தியையும்  ஆக்கத் திறனையும் பயன்படுத்துவதை இது ஊக்குவிக்கும் என ரெய்ச்சர்ட் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .