2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விருப்பு வாக்குமுறைமை அடுத்த தேர்தலில் இருக்குமெனில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவேன்: அமைச்சர் மில

A.P.Mathan   / 2010 நவம்பர் 10 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

விருப்பு வாக்குமுறைமை அடுத்த தேர்தலில் இருக்குமெனில் வன்னி மாவட்டத்தில் போட்டியிடுவேன் என மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

புத்தளம் பிரதேச அபிவிருத்தி குறித்து ஆராயும் கூட்டம், புத்தளம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று புதன்கிழமை இடம் பெற்றபோததே அவர் மேற்கண்டவாறு கூறினார். புத்தளம் பிரதேச செயலாளர் ஏ.சீ.எம்.நபீல் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது மேலும் அவர் கூறியதாவது:

1990ஆம் முதல் இடம்பெயர்ந்து புத்தளத்துக்கு வந்த வடமாகாண மக்களுக்கு புத்தளத்து மக்கள் பெரும் உதவிகளை செய்துள்ளனர். அவ்வாறு உதவி செய்த மக்களுக்கு எனது அமைச்சின் மூலம் ஆற்றக் கூடிய அனைத்து பணிகளையும் செய்வேன். இடம் பெயர்ந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை எக்காரணம் கொண்டும் வென்னப்புவ பிரதேச அபிவிருத்திக்கு பயன்படுத்தப்போவதில்லை.

இந்த அமைச்சின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டிடங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தி பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேன். குறி்ப்பாக அடுத்த தேர்தலொன்று தொகுதி ரீதியாகவோ அல்லது விகிதாசார முறையிலோ வந்தாலும் நான் புத்தளத்துக்கு வந்து விருப்புவாக்குகளை கேட்கமாட்டேன். நான் வன்னியில் சென்று வாக்கு கேட்பேன்.

இடம் பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் விவசாய நிவாரணங்களை எவரும் தடுத்து நிறுத்த வேண்டாம். அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் என்பதால் தான் அவைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. தகுதியிருந்தும் கிடைக்காத உள்ளூர் விவசாயிகள் இருப்பின் உங்கள் பிரதேச பிரதிநிதிகளின் மூலம் எனது கவனத்துக்கு கொண்டுவாருங்கள், அதற்கான நடவடிக்கையினை நான் மேற்கொள்வேன் என்றும் அமைச்சர் மில்ரோய் இங்கு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .