2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீள்குடியேற்ற அமைச்சை பெற்றதன் மூலம் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு பணியாற்றுகின்றேன்: அமைச்சர் மி

Super User   / 2010 நவம்பர் 11 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

மீள்குடியேற்ற அமைச்சை பெற்றதன் மூலம், அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகமொன்றுக்கு பணியாற்றக் கூடிய சந்தர்ப்பத்தை கடவுள் தமக்கு வழங்கியுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ தெரிவித்தார்.

புத்தளம் கரைத்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இரு பெரும் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மில்ரோய்,

இவ்வாறான மக்களுக்கு ஆற்றும் பணி புண்ணியமிக்கது. கடந்த பொதுத்தேர்தலில் என்னை மக்கள் நிராகரித்து விட்டனர்.

விருப்பு வாக்குகளை பார்க்கும் போது நான் 6ஆவது இடம். அவ்வாறான நிலையில் ஏன் நான் பணியாற்ற வேண்டும். ஆனால் எமக்கு மக்கள் வாக்களிக்காவிட்டாலும், இம்மாவட்ட மக்களுக்கு பணி செய்வதில் தான் நான் ஆனந்தம் அடைகின்றேன்.

குறிப்பாக புத்தளம் மாவட்டத்தில் சகல இன மக்களுக்கும் எனது பணிகள் சென்றடைந்துள்ளன.

கரைத்தீவு பிரதேசத்தை எடுத்துக் கொண்டால் எனது நிதி ஒதுக்கீடுகள் மூலம் தான் அதிகப்படியான வேலைகள் நடந்துள்ளன. ஆனால் இன்று எதையும் செய்யாத சிலர் வெறுமனே கூவித் திரிகின்றனர்.

இவர்கள் தேர்தல் காலங்களில் வந்து மக்களை ஏமாற்றிவிட்டு செல்வார்கள். மீண்டும் மற்றுமொரு தேர்தலுக்குத் தான் வருவார்கள். இவர்களுக்கு நான் சவால் விடுக்கின்றேன், கரைத்தீவு பிரதேசத்துக்கு அவர்கள் செய்த சேவையை கூற முடியுமா என கேட்கின்றேன்.

வடக்கிலிருந்து மக்கள் வந்து மெனிக் பார்மில் இருந்தனர். இவர்கள் பற்றி எல்லோரும் பேசுகின்றனர். ஆனால் 90ஆம் ஆண்டு புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம்கள் பற்றி பேசுவதில்லை. அவர்கள் மீள்குடியேற்றப்பட வேண்டும். அதற்கான பணிகளை நாம் முன்னெடுத்துவருகின்றோம்.

இடம்பெயர்ந்த மக்கள் வந்த போது புத்தளம் தொகுதி மக்கள் அனைத்தையும் அம்மக்களுக்காக கொடுத்தனர். அவ்வாறு கொடுத்த மக்களுக்கு இந்த அமைச்சின் மூலம் பணியாற்ற ஏன் முடியாது, அதனை நாம் செய்கின்றோம், பாடசாலை கட்டிடங்களை கட்ட முற்படும்போது சில தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அதனை மிகவும் சாதுரியமாக நகர்த்தியுள்ளோம் என்று குறிப்பிட்டார்.

பாடசாலை அதிபர் ஏ.பாரிஸ் அகமத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வண்ணாத்தவில்லு பிரதேச சபை தலைவர் அசனர் மரைக்கார், உறுப்பினர் சுல்தான் மரைக்கார், வடக்கு முஸ்லிம்களுக்கான செயலக ஆணையாளர் எம்.பஹ்ரி, புத்தளம் கோட்டக் கல்வி பணிப்பாளர் வீ.நிர்மலா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

நடந்து முடிந்த 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்கள் பாராட்டப்பட்டும், விருதுகள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டதுடன்,ஆசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.

இதேவேளை 67 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பாடசாலைக்காக இருமாடி கட்டிடத்துக்கான முதல் மாடி நிர்மாணப்பணிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வும் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .