2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரூபா 1,007 மில்லியனை வரிக்கு முன்னரான தேறிய இலாபமாக பெற்றுள்ள எக்ஸ்போலங்கா

A.P.Mathan   / 2012 நவம்பர் 19 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது, 2012/13 நிதியாண்டின் முதலாம் அரையாண்டில் ஒன்றுதிரட்டிய வரிக்குப் முன்னரான தேறிய இலாபத்தை ரூபா 1,007 மில்லியனாக அதிகரித்துக் கொண்டுள்ளது. கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் பெற்றுக்கொண்ட ரூபா 861 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 17 சதவீத அதிகரிப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டில் வரிக்கு முன்னரான தேறிய இலாபம் ரூபா 546 மில்லியனாக பதிவுசெய்யப்பட்டுள்ளமையானது, கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 23 சதவீத அதிகரிப்பாக காணப்படுகின்றது.

2012/13ஆம் நிதியாண்டின் முதலாவது காலாண்டில் ரூபா 12.64 பில்லியனையும் முதல் 6 மாதங்களில் ரூபா 23.04 பில்லியனையும் நிறுவனம் வருமானமாக உழைத்துள்ளது. கடந்த வருடத்தின் தொடர்புபட்ட காலப்பகுதிகளில் பதிவுசெய்யப்பட்ட ரூபா 8.64 பில்லியன் மற்றும் ரூபா 17.06 பில்லியனுடன் ஒப்பிடுகையில், இவை முறையே 46 சதவீத மற்றும் 35 சதவீத அதிகரிப்பாக அமைந்துள்ளது.

சரக்கு அனுப்புதல் மற்றும் உபகரண வழங்கல் துறையின் வரிக்கு முன்னரான தேறிய இலாபம் இரண்டாம் காலாண்டில் ரூபா 443 மில்லியனாகவும் முதலாம் அரையாண்டில் ரூபா 768 மில்லியனாகவும் பதிவுசெய்யப்பட்டது. பயணம் மற்றும் விடுமுறைகால வசதிகள் துறையானது முதலாம் அரையாண்டு காலப்பகுதியில் வரிக்கு முன்னரான தேறிய இலாபமாக பெற்றுக்கொண்ட ரூபா 87 மில்லியன், தனிச்சிறப்புமிக்க விதத்திலான 280 சதவீத அதிகரிப்பாக காணப்படுகின்றது. சர்வதேச வர்த்தகம் மற்றும் உற்பத்தியாக்கல் துறையானது 112 சதவீத அதிகரிப்புடன் ரூபா 111 மில்லியனை வரிக்கு முன்னரான தேறிய இலாபமாக பதிவுசெய்துள்ளது. அதேநேரம், முதலீடுகள் மற்றும் சேவைத் துறை வரிக்கு முன்னரான தேறிய இலாபமாக ரூபா 41 மில்லியனை உழைத்துள்ளது.

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனிப் யூசுப் கூறுகையில், 'இந்நிதியாண்டின்; முதல் ஆறு மாதங்களிலும் குழுமத்தின் தொழிற்பாடுகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. அதாவது - புதிய வெளிநாட்டு தொழில் முயற்சிகளுடன் தொடர்புபட்ட அமைப்பாக்கச் செலவின் மூலமாக மொத்தச் செலவு அதிகரித்ததுடன், நிறுவனத்தின் முன்னெடுப்புக்கள் மீது நாணய மதிப்பிறக்கமானது பாதகமான தாக்கங்களையும் விளைவித்தது. ஆயினும், இவ்வாறான பாதிப்புக்களை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.

ஊக்கமளிக்கும் வகையிலமைந்த தொழிற்பாடுகளுக்கு மத்தியிலும், இக் குழுமத்தின் கீழ் செயற்படும் ஒரு சில கடல்கடந்த (வெளிநாட்டு) கம்பனிகள் வருமான வரி வீதங்களில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக பாதிக்கப்பட்டன. இதன் பயனாக, குழுமத்தின் பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான தேறிய இலாபத்தில் தாக்கமொன்று ஏற்பட்டது.

இவ்வருட காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட வெளிநாட்டுத் தொழில்முயற்சிகள் இன்னும் குறித்தொதுக்கப்பட்ட இலாப மட்டங்களை அடைந்து கொள்ள வேண்டிய நிலையிலேயே உள்ளன. எவ்வாறிருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்குத் தேவையான போதுமான அவதானம் மற்றும் வளங்கள் இம்முயற்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம் இத்துறையை மறுசீரமைக்கும் செயற்பாட்டின் பொருட்டும் மேலும் மேந்தலைச் செலவுகள் ஏற்பட்டுள்ளன. பயணம் மற்றும் விடுமுறைகால வசதிகள் துறையானது, உள்நாட்டு கம்பனிகளிலும் அதேபோன்று புதிதாக கையகப்படுத்தப்பட்ட 'அக்குவாசன் ஹொலிடேய்ஸ் இந்தியா' நிறுவனத்திலும் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை, இந்தியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை பிரதானமாகக் கொண்டு, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா துறைகளுக்கு இடையிலான இணைத்தொழிற்பாட்டை மேம்படுத்தும் பொருட்டு எக்ஸ்போலங்கா நிறுவனம் மேற்கொண்ட உடனடி உபாய நடவடிக்கைகள் தற்போது அதனது விளைபயனை தர ஆரம்பித்துள்ளன.

விமான சேவை பொது விற்பனை முகவர் (Airline GSA) துறையானது ஆண்டுக்கு–ஆண்டு அடிப்படையில் தனது இலாப மட்டத்தை 33 சதவீதத்தினாலும், வருமானத்தை 5 சதவீதத்தினாலும் அதிகரித்துக் கொண்டுள்ளது. அத்துடன், மூன்றாம்நிலை கல்வி நிறுவகம் வருமானம் மற்றும் இலாபத்தில் தொடர்ச்சியாக வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. அதேவேளை கூட்டாண்மை சேவைகள் என்ற அடிப்படையில், குழுமத்தின் பெறுமானத்தை பலப்படுத்துதல் மற்றும் மேலும் பெறுமதி சேர்த்தல் எனும் நோக்கத்தில் கடந்த வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க முதலீடுகள், இத்துறையின் செயற்பாடுகளில் சிறு தாக்கத்தை ஏற்படுத்தின.

சர்வதேச வர்த்தகம் மற்றும் உற்பத்தியாக்கல் துறையை பொறுத்தமட்டில், மத்திய கிழக்கு சந்தைகள் முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் வியாபாரத்தை மேற்கொள்ள மேலும் உகந்தவையாக முன்னேற்றமடைந்துள்ளன. தேயிலை துறை செயற்பாட்டு செயற்றிறன் மற்றும் வருமான மட்டத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பெற்றுக் கொண்டமையானது, வர்த்தகம் மற்றும் உற்பத்தியாக்கல் துறையில் இருந்து அதிகரித்த வருமானத்தை உழைத்துக் கொள்வதற்கான உந்துசக்தியை அளித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .