2024 மார்ச் 28, வியாழக்கிழமை

செலான் வங்கியின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக கபில ஆரியரத்ன

Menaka Mookandi   / 2011 மார்ச் 03 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செலான் வங்கி பி.எல்.சி. நிறுவனத்தின் புதிய பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியாக பிரபல வங்கியியலாளரான கபில ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக அவ்வங்கி இன்று அறிவித்துள்ளது. 

 

பல்வகைத் திறமைகளைத் தன்னகத்தே கொண்டவரான ஆரியரத்ன, வங்கியியல் துறையில் 25 வருடங்களுக்கும் அதிகமான பரந்துபட்ட அனுபவத்தை தன்னுடன் கொண்டு வருகின்றார்.

1984ஆம் ஆண்டு கிரைன்ட்லேய்ஸ் வங்கி பி.எல்.சி. நிறுவனத்தில் ஒரு முகாமைத்துவ பயிலுனராக இணைந்து கொண்டதன் மூலம் வங்கியியல் துறைக்குள் நுழைந்த ஆரியரத்ன, பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் 27 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.

இவர் பணிபுரிந்த வங்கிகளுள் ஏ.பி.என். அம்ரோ வங்கி என்.வி., மஷ்ரக் வங்கி பி.எஸ்.சி., அரபு தேசிய வங்கி றியாத்), மக்கள் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஆகியவையும் உள்ளடங்குகின்றன.

இதன் காரணமாக சர்வதேச நிறுவனங்கள், அரச துறை நிறுவனங்களில் வேலை செய்த அனுபவத்தையும் அதேநேரம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனியார் துறை வங்கிககளில் பணியாற்றியதன் நன்மைகளையும் அவர் பெற்றுள்ளார்.

கூட்டாண்மை வங்கியியல் துறையில் கனதியான பங்களிப்பை வழங்கிய அனுபவத்தைக் கொண்டுள்ள அதேநேரம், சர்வதேச வர்த்தக நிதிச் செயற்பாடு, வாடிக்கையாளர் சேவை செயற்பாடுகள், கடன் இடர் முகாமைத்துவம், நிறுவனமயப்படுத்தப்பட்ட மற்றும் பெரிய வங்கிகளுடன் இணைந்து செயற்படும் வங்கி நடவடிக்கைககள், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள், நுண்நிதியியல் போன்றன தொடர்பான அனுபவத்தையும் ஆரியரத்ன தனது கையில் வைத்துள்ளார்.  

2001ஆம் ஆண்டில் மிக முக்கிய அரச வங்கியொன்றை மீள் கட்டமைக்கும் நடவடிக்கையை பொறுப்பெடுத்து செயற்படுத்திய குழுவின் அங்கத்தவரான ஆரியரத்ன, தற்காலத்தில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு வாய்ப்புக்களை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளத்தக்க வகையில், பாரியளவிலான நிறுவனங்களில் முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும் பொறிமுறை செயற்பாடுகள் தொடர்பிலும் பரீட்சயமுள்ளவராவார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான ஆரியரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் முதல் வகுப்பில் சிறப்புப் பட்டம் பெற்றவராவார். செயற்றிறனுள்ள ஒரு விளையாட்டு வீரரான இவர், ரக்பி போட்டியில் ரோயல் கல்லூரி சார்பாக திறமையை வெளிக்காட்டிதன் மூலம் அக்கல்லூரியை பிரகாசிக்கத் செய்ததுடன், பல்கலைக்கழத்தின் சார்பில் ரக்பி மற்றும் கால்பந்து போட்டிகளில் விளையாடி கொழும்பு பல்கலைக்கழகத்தையும் பிரகாசிக்கச் செய்தார்.

செலான் வங்கியின் தலைவர் ஈஸ்ட்மன் நாரங்கொட கூறுகையில், 'மனோதிடமுள்ள சிரேஷ்ட வங்கியியலாளரான கபில ஆரியரத்னவை எமது நிறுவனத்திற்கு வரவேற்பதையிட்டு செலான் வங்கி மகிழ்ச்சியடைகின்றது.  நீங்கள் அனைவரும் அறிந்திருப்பதைப் போல், வங்கியானது தற்போது மாற்றம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் உத்வேகத்துடனும் சாதக நிலைமையுடனும் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இந்த அடிப்படையில் இலங்கையின் நிதித்துறையில் மறுமலர்ச்சி கண்டுவரும் செலான் வங்கியின் தொடர்ச்சியான செயற்பாடுகளுக்கு, பிரதம நிறைவேற்று அதிகாரி என்ற வகையில் கபில ஆரியரத்னவின் தேவையாகவுள்ள மற்றும் சவால்மிக்க வகிபாகமானது பாரிய பங்களிப்பினை வழங்கும் என்பதில் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் நானும் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்' ன்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X