2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தொடர்ந்தும் சரிவுப் பாதையில் 'ஆசியாவின் சிறந்த' பங்குசந்தை

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 17 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்

(ச.சேகர்)

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்தின் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6549.91 ஆகவும், மிலங்கா விலைச் சுட்டெண் 5878.33 ஆகவும் அமைந்திருந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாரம் பங்குச்சந்தை பிரதான சுட்டிகள் சற்று 100 – 150 புள்ளிகள் வீழ்ச்சியை காண்பித்திருந்ததுடன், மொத்த பங்கு புரள்வு பெறுமதியை கருதுகையில் கடந்த வாரத்தைவிட 25 வீத வீழ்ச்சியையும் காண்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பீபிள்ஸ் லீசிங் கம்பனியின் 390,000,040 சாதாரண வாக்குரிமையுடைய பங்குகள், ஒன்று 18 ரூபா வீதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 2011 வெளியிடப்படவுள்ளது. இந்த பொது பங்கு வழங்கல் மூலம் நிறுவனம் 7,020,000,720 ரூபாவை முதலீடாக திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆகக்குறைந்த சந்தா தொகையாக 1,000 பங்குகளை முதலீட்டாளர்கள் கொள்வனவு செய்ய முடியுமென நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பொது பங்கு வழங்கலுக்கும், பட்டியலிடலுக்கும் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் நாணய கொள்கை சபையினால் வங்கித்துறை சாராத நிதிசார் நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த விதி முறையான 2011ஆம் ஆண்டினுள் அனைத்து நிறுவனங்களும் பொது பட்டியலிடப்பட்டிருத்தல் வேண்டும் என்பதற்கு அமைவாக அமைந்துள்ளது.

ஓக்டோபர் 10ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 6,815,854,799 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 50,078 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 48,902 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,176 ஆகவும் பதிவாகியிருந்தன. முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இடம்பெற்ற மொத்த கொடுக்கல் வாங்கல்கள் குறைந்து காணப்பட்டது. சர்வதேச பங்குச் சந்தைகள் பலவற்றிலும் மிகவும் மோசமான சரிவுகளும், விலைத் தளம்பல்களும் ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் எஸ்.எம்.பி. லீசிங், ஒடோடிரோம், சிங்கபுத்ர பினான்ஸ், மல்வத்த மற்றும் சம்சன் இன்டர்நட் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

ஏசியன் அலையன்ஸ், இன்ஃபிராஸ்ட்ரக்சர், பிளுடயமண்ட்ஸ், எஸ்.எம்.பி. லீசிங் மற்றும் ஃபின்லேஸ் கொழும்பு போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை

கடந்த வாரமும் தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் 24 கெரட் பவுணொன்றின் 57,000 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்க நகை வியாபார வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது.

வெள்ளி 10 கிராமின் சராசரி விலை 1472.49 ரூபாவாக காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X