2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் 2011/12 இன் முதல் அரையாண்டில் வரிக்கு பின்னரான இலாபமாக ரூபா 668 மில்லியனை ப

A.P.Mathan   / 2011 நவம்பர் 15 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எக்ஸ்போ லங்கா பி.எல்.சி. நிறுவனமானது 2011/12 நிதியாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் ஒன்றுதிரண்ட வரிக்கு முன்னரான தேறிய இலாபமாக 862 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதுடன், ஒன்றுதிரண்ட வரிக்கு பின்னரான தேறிய இலாபமாக 668 மில்லியன் ரூபாவை பேணிக் கொண்டுள்ளது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, அதனோடிணைந்த பிராந்திய பொருளாதார வீழ்ச்சி, மத்திய கிழக்கில் நிலவிய பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் என்பவற்றின் காரணமாக சர்வதேச வர்த்தகத் துறையில் குழுமம் பல சவால்களை எதிர்கொண்டிருந்த பின்னணியிலேயே இந்த நிதிப் பெறுபேறுகளை நிறுவனம் பெற்றுக் கொண்டுள்ளது.

எக்ஸ்போ லங்கா பி.எல்.சி. நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹனீப் யூசுப் கூறுகையில், இரண்டாம் காலாண்டில் கடன் நெருக்கடியினால் ஏற்பட்ட பாதகமான நிலைமைகளுக்கு மத்தியிலும், போக்குவரத்துத் துறையில் சரக்கு சேவை உப பிரிவு உறுதியான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியது என்றார். அவர் மேலும் கூறுகையில், 'ஐக்கிய அமெரிக்க இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மத்திய கிழக்கில் படிப்படியாக பரவிய பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளின் காரணமாக பொது விற்பனை முகவர் (GSA) உப துறையானது பல மாதங்களாக சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது. சந்தையில் போட்டி அதிகரித்தமை, வகையறாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதத்திலான நடவடிக்கை போன்றவற்றினால் சரக்கு அனுப்புதல் சேவை கட்டணங்கள் கீழ் நோக்கிய போக்கினை கொண்டிருந்தன. எவ்வாறிருந்த போதிலும், விலையிடலில் போட்டிகரமான நிறுவனமாக தொடர்ந்தும் திகழவும் அதனூடாக இந்த உப துறையை வளர்ச்சி பெறச் செய்யவும் தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன' என்று குறிப்பிட்டார்.

நிதியாண்டின் குறித்த திகதி வரையிலான காலப்பகுதியில் குழுமத்தின் இலாபத்தில் போக்குவரத்துத் துறையின் பங்கினை தொடர்ந்தும் ஸ்திரமாக பேணும் வகையி;ல் நிர்வகிக்கப்பட்டது. இதன்படி, வரிக்கு முன்னரான இலாபத்திற்கு ரூபா 839 மில்லியன் பங்களிப்பினையும் வரிக்கு பின்னரான இலாபத்திற்கு ரூபா 690 மில்லியன் பங்களிப்பினையும் இத்துறை வழங்கியது. ஏனைய மூன்று முக்கிய துறைகளான - சர்வதேச வர்த்தகம், உற்பத்தி மற்றும் உபாய ரீதியிலான முதலீடுகள் - ஆகியன குழுமத்தின் வரிக்கு முன்னரான  இலாபத்திற்கு ரூபா 120 மில்லியனையும் வரிக்கு பின்னரான இலாபத்திற்கு ரூபா 100 மில்லியனையும் பங்களிப்பாக வழங்கியுள்ளன.

நாட்டுக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள அபரிமிதமான அதிகரிப்பினை அடுத்து புதுப் பொலிவு பெற்றுள்ள கேள்வியை எதிர்கொள்ளும் முகமாக, எக்ஸ்போ லங்கா குழுமமானது தற்போது பாரிய மாற்றங்களுக்குள் தன்னை உட்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் பயண சேவைப் பிரிவில் இத்துறையில் மேலும் வளர்ச்சி ஏற்படுவதற்கு இம்முயற்சி உறுதுணையாக அமையும். எதிர்வரும் மாதங்களில் சரக்கு அனுப்புதல் துறையானது தனது ஸ்தானத்தை பலப்படுத்தும் அதேநேரம் GSA ஆனது, விலையிடல் மற்றும் நிலையினை உறுதிப்படுத்துதல் ஆகிய விடயங்களில் மேலும் போட்டிகரமாக திகழ்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல் தலைமை அதிகாரி பெடி வீரசேகர கூறுகையில், 'விவசாயத் துறையில் எதிர்கொள்ளப்பட்ட பின்னடைவான நிலைமைகள், நிறுவனம் சரியான  நேரத்தில் குறைந்த செலவுடன் போதிய அளவான உற்பத்தியை மேற்கொள்வதற்கு உதவியாக அமைவது மாத்திரமன்றி, அதன்மூலம் குறித்த துறையின் செயற்றிறனையும் பலப்படுத்தக் கூடியதாக இருக்கும். இதற்கு மேலதிகமாக, பெறுமதிசேர் உற்பத்திகளில் எமது சக்திகளை மையப்படுத்தி செயலாற்றவுள்ளோம். இவை எதிர்காலத்தில் உயர்ந்தளவிலான பங்களிப்பினை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது' என்றார்.

இன்னும், 'இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு தரமான கல்வி வழங்குவதை பலப்படுத்துதல் மற்றும் இலகுவானதாக மாற்றியமைத்தல்' என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக, கல்வித் துறையில் முதலீடுகளை மேற்கொண்டு அதனூடாக வளர்ச்சி காண்பதில் எக்ஸ்போ லங்கா நிறுவனம் மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளது.

'உள்நாட்டு பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், இலங்கை முழுவதும் எமது பிரசன்னத்தை உறுதிப்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் தென் மாகாணத்தின் வர்த்தக மையமாக மிளிரவுள்ள ஹம்பாந்தோட்டையில் நிறுவனம் தனது நிலையங்களை அமைத்துள்ளது. துறைமுகம், சர்வதேச விமான நிலையம் மற்றும் நட்சத்திர தரம் வாய்ந்த ஹோட்டல்கள் போன்றன புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருவதால், இந்த நகரமானது பெரும் எண்ணிக்கையிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் விதத்தில் அமையும். இதேவேளை, கிளசிக் ட்ரவல்ஸ் மற்றும் எக்ஸ்போ லங்கா ஃபிரைட் (சரக்கு அனுப்புதல் சேவை) ஆகிய நிறுவனங்கள் தமது கிளை அலுவலகங்களை இரண்டாம் காலாண்டுப் பகுதியில் ஹம்பாந்தோட்டையில் திறந்து வைத்துள்ளன' என்று யூசுப் மேலும் குறிப்பிட்டார்.

சொகுசு ரயில் சேவையான Expo Rail இனை ஆரம்பித்து வைத்தமை இரண்டாம் காலாண்டுப் பகுதியில் போக்குவரத்துத் துறையில் குழுமம்; மேற்கொண்ட மற்றுமொரு புத்தாக்கமாகும். கொழும்பில் இருந்து கண்டிக்கு கட்டுப்படியான கட்டணத்தில் சொகுசாக பயணம் செய்யக் கூடிய வசதியை இந்த சேவை வழங்குகின்றது. அதேவேளை எக்ஸ்போ லங்கா குழுமம் Expolanka - APIIT தொழில் முயற்சியாண்மை தாபரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தையும் அங்குரார்ப்பணம் செய்துள்ளது. இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், தொழில் முயற்சியாண்மை திறமைகளுடன் உள்ள மாணவர்களுக்கு உறுதியான வளர்ச்சி ஒன்றினை அடைவதற்கு புத்தாக்க ஆரம்பத்தை அபிவிருத்தி செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும்.

அதேநேரம் எக்ஸ்போ லங்கா நிறுவனம் தனது கூட்டாண்மை சமூக பொறுப்புத் திட்டங்களை உயர்ந்த மட்டங்களுக்கு கொண்டு செல்வதில் குறிப்பிடத்தக்க அடிகளை எடுத்து வைத்துள்ளது. வசதி குறைந்த மக்களுக்கு சேவையாற்றுவதை நோக்காகக் கொண்டு எக்ஸ்போ லங்காவின் கூட்டாண்மை சமூக பொறுப்புத் திட்ட குழுவானது சிக்கனமான சுகாதார பராமரிப்பு வசதிகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. EXPO MEDIX எனப் பெயரிடப்பட்டுள்ள இவ்வசதி, குறிப்பிட்ட பகுதியில் வாழும் பிரதேசவாசிகளுக்கு அடிப்படை சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்குகின்றது. மட்டக்குளி, ஸ்லேவ் ஐலண்ட், கிராண்ட்பாஸ், வத்தளை மற்றும் களுத்துறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள இலாப நோக்கற்ற இந்நிலையங்கள் செலவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .