2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

செலான் வங்கியின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமான்ன

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 14 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனாதிபதி சட்டத்தரணியும் செலான் வங்கியின் சிரேஷ்ட சுயாதீன பணிப்பாளருமான நிஹால் ஜயமான்ன வங்கியின் புதிய தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். அதேநேரம், செலான் வங்கி பிரதி தலைவராகஇஷார நாணயக்கார பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணியான நிஹால் ஜயமான்ன, பிரசித்திபெற்ற சட்டத்தரணியும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணியுமாவார். சட்டத்துறையில் இவர் பல முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார். அவற்றுள் - இலங்கை சட்ட ஆணைக்குழுவின் தலைவர்,  கம்பனி சட்ட ஆலோசனை ஆணைக்குழுவின் தலைவர், இலங்கை சட்டக்கல்லூரி மன்ற தலைவர் மற்றும் சட்டத்துறை உட்கட்டமைப்பு பராமரிப்பு நிதிய நம்பிக்கைப் பொறுப்புச் சபையின் உறுப்பினர் போன்ற பதவிகளும் உள்ளடங்குகின்றன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், SAARCLAW அமைப்பின் முன்னாள் பிரதித் தலைவரும், இலங்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஓர் உறுப்பினராக பதவி வகித்தவருமான ஜயமான்ன, சட்டக் கல்வி ஆலோசனை சபையில் உறுப்பினராகவும், மனித உரிமைகள் மேம்பாட்டுக்கான ஆசியா பசுபிக் மன்ற ஜூரிகளின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அத்துடன், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஆணையாளராகவும் செயற்படுகின்றார்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தலையீட்டினால் செலான் வங்கியின் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு, உடனடியாக புதிய பணிப்பாளர் சபையின் கீழ் செயற்பாடுகள் அனைத்தையும் மீள ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்ட வேளையில், 2008 டிசெம்பர் 30ஆம் திகதி வங்கியின் பணிப்பாளர் சபைக்கு முதலாவதாக நியமிக்கப்பட்ட நான்கு பணிப்பாளர்களுள் ஜயமான்னவும் ஒருவராவார்.

அதேநேரம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிட்டெட் மற்றும் ஸ்ரீலங்கன் கேற்றரிங்க் (பிரைவேட்) லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளிலும் ஜயமான்ன பணியாற்றுகின்றார்.


மதிநுட்பமுள்ள ஒரு வர்த்தக முயற்சியாளரான இஷார நாணயக்கார பல்வேறு கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் கூட்டுநிறுவனங்களில் பணிப்பாளராக பதவி வகிக்கின்றார். இவர் LOLC நிறுவனத்தில் மேற்கொண்ட முதலீட்டின் ஊடாக நிதியியல் சேவைகள் துறையில் துணிகர முயற்சி ஒன்றை நிலைநாட்டினார்.

LOLC குழுமத்தின் பிரதித் தலைவர் என்ற வகையிலும் லங்கா ஒரிக்ஸ் ஃபினான்ஸ் பி.எல்.சி.யின் பணிப்பாளராகவும், கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவன தலைவராகவும் பதவி வகிப்பதன் மூலமும் அதேநேரம், இலங்கையின் தனியார் துறையிலுள்ள மிகப் பெரிய நுண்நிதியிடல் நிறுவனமான LOLC மைக்ரோ கிரெடிட் லிமிட்டெட்டின் ஸ்தாபக பணிப்பாளர்களுள் ஒருவராக திகழ்வதன் ஊடாகவும் இவர் செயற்றிறன்மிக்க ஈடுபாட்டினை வெளிப்படுத்துவதன் காரணமாக, நிதியியல் சேவைகள் துறையில் பரந்துபட்ட விதத்திலான கவனத்தை செலுத்தி வருகின்றார். கம்போடியா நாட்டின் மிகப் பெரிய நுண்நிதியிடல் கம்பனியும், பிராந்தியத்தின் நுண் நிதியிடல்சார் சமூகத்தில் சிறப்பான பங்கினை வகிக்கின்ற நிறுவனமுமான PRASAC இன் பணிப்பாளராக நாணயக்கார சேவையாற்றுகின்றார்.

அதேவேளை வர்த்தகம், விடுமுறைகால சேவை, உற்பத்தி, நுகர்வோர் பாவனைப் பொருட்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் தொடர்பான வர்த்தகத்தில், சந்தையில் முன்னணி ஸ்தானத்தைப் பெற்றுள்ள 135 வருடங்கள் பழமைவாய்ந்த ஒரு கூட்டு நிறுவனமான பிரவுண் அன்ட் கம்பனி பி.எல்.சி. யின் ஒரு பணிப்பாளராகவும் பதவி வகிக்கின்றார். Sierra construction Ltd மற்றும் Agstar Fertilizers (PVT) Ltd போன்ற நிறுவனங்களின் பணிப்பாளராக பணியாற்றுபவர் என்ற வகையில் அவரது தூரநோக்கானது, இந்நாட்டு பொருளாதாரத்தின் வளர்ச்சியடையும் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்குகின்றது.

இவர் 2009 நவம்பர் 24ஆம் திகதி செலான் வங்கி பி.எல்.சி.யின் பணிப்பாளர் சபையில் ஒரு உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டதுடன், 'நிலைபேண்தகுதன்மை குழுவின'; தலைவராகவும் சேவையாற்றுகின்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .