2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

ரஷ்யாவில் பயர்பேட்ஸ் அணிக்கு விருது

A.P.Mathan   / 2013 ஜூலை 21 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரஷ்யாவின் புனித பீற்றர்ஸ்பேக் நகரில் நடைபெற்ற சர்வதேச மைக்ரோசொப்ட் Imagine Cup போட்டியில் புதிய சிந்தனை, பூகோள ஆய்வு, எண்களின் விவேகம் ஆகியவற்றுக்கான சம்சுங் டிஜிட்டல் நேட்டிவ் விருதை இலங்கையை சேர்ந்த பயர்பேட்ஸ் அணியினர் வென்றெடுத்துள்ளனர்.
 
ரஷ்யாவில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இன்போமெடிக்ஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை சேர்ந்த பயர்பேட்ஸ் குழுவினர் கலந்துகொண்டனர்.
 
சென்சர் கட்டமைப்பின் உதவியுடன் கண்பார்வையற்றவர்களுக்கு தமது நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான மென்பொருளை நிர்மாணித்த பயர்பேட்ஸ் குழுவில் ஸ்டெபான் உடுமலகல, மொஹமட் ஷெயான், அமல் குணதிலக்க, கிஷோகுமார் கணேஷலிங்கம் ஆகிய மாணவர்கள் இடம்பெற்றிருந்தனர். 
 
சர்வதேசத்தை சேர்ந்த 800 இற்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்ட இப்போட்டி வரலாற்று சிறப்புமிக்க எலெக்ஸ்ட்ரான்க்கி அரங்கில் நடைபெற்றதுடன் நடுவர் குழாம், ரஷ்ய பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.  
 
சர்வதேச Imagine cup போட்டிகள் புத்தாக்கம், விளையாட்டு, உலக குடியுரிமை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் நடைபெற்றதுடன் பிரித்தானியா, ஆஸ்திரியா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அப்போட்டிகளில் வெற்றியீட்டியதுடன் தலா 50,000 அமெரிக்க டொலர்களை பரிசாக வென்றெடுத்தனர். 
 
சர்வதேச போட்டிகளுக்கு அனுசரணை வழங்கிய Samsung நிறுவனத்தினர் மூன்று பிரிவுகளிலும் சிறப்பாக செயற்பட்டவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு Samsung Digital Native விருதை வழங்க முன்வந்ததுடன் இலங்கையை சேர்ந்த பயர்பேட்ஸ் அணிக்கே Samsung Digital Native விருதும் 10,000 அமெரிக்க டொலர்களும் பரிசாக வழங்கப்பட்டது.
 
பயர்பேட்ஸ் அணியின் தலைவர் மொஹமட் ஷெயான் கருத்து தெரிவிக்கையில், 'இது எமக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம். இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தபோது அதிக மகிழ்ச்சியடைந்தோம். தற்போது விருதொன்றை வென்றெடுத்துள்ளமை எமது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது' என குறிப்பிட்டார். 
 
மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்காவின் DPE பணிப்பாளர் வெலிங்டன் பெரேரா கருத்து தெரிவிக்கையில்,  'இலங்கையை சேர்ந்த அணியொன்று முதற்தடவையாக சர்வதேச போட்டியில் வெற்றியீட்டியமை தொடர்பில் நாம் பெருமிதம் கொள்கின்றோம். இந்த வெற்றியை அடுத்து மேலும் பல மாணவர்கள் இந்த போட்டிகளில் கலந்துகொண்டு இலங்கைக்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .