2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நம் கைகளிலுள்ள பணம் தொடர்பில் அறிவோமா?

அனுதினன் சுதந்திரநாதன்   / 2019 ஒக்டோபர் 28 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வுலகில் பணமானது பல்வேறு வகை பெயர்களுடன் பல்வேறு பரிணாமங்களில் பலமில்லியன் பேர்களின் கைகளில் கொட்டிக் கிடக்கிறது. அவற்றில் எவை எல்லாம் பரிமாற்றத்துக்கு உகந்தவை ? எவை எல்லாம் சட்டச் சிக்கல் நிறைந்தவை? என்பது தொடர்பில் சிறிதாவது நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அப்போதுதான், நம் கைகளில் உள்ள பணம் கறை படிந்ததா? இல்லையா? என்பதை உணர்ந்து செயற்பட முடியும்.  

இன்றைய நிலையில், நாம் பணத்தைக் கொண்டு எதனை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலைக்கு வந்துவிட்டோம். அந்தளவு தூரத்துக்கு மக்களின் பணத்தேவையும் பணம் மீதான மதிப்பும் அதிகரித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். சாதாரணமாக பணமானது சேவை வழங்கல், உற்பத்தி, தொழில் முயற்சி, சட்டரீதியான வர்த்தகப் பரிமாற்றம் மூலமாக மக்களுக்கு வந்தடைகிறது. அவ்வாறு நம் கைகளில் வரும் பணத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களாக இருக்கிறோம். அப்படித்தான் நமக்கான சட்டதிட்டங்களும் கட்டுப்பாடுகளும் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், அந்தப் பணம் நம் கைகளுக்கு வருவதற்கு முன்பதாக அதன்நிலை என்ன என்பது தொடர்பில் எப்போதாவது சிந்தித்து இருக்கிறோமா ?   

கறுப்புப் பணம் (Black Money)  

சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் பணம் அழுக்கு பணம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறு பெறப்படும் பணம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொடுக்கல் வாங்கல்களுக்குப் பயன்படுத்தப்படாது பதுக்கப்படுமாயின் அவை கறுப்பு பணமாக இனங் காணப்படும். எனவேதான் பெரும்பாலான செல்வந்தர்கள் முறையற்ற விதத்தில் உழைத்த பணத்தை சட்டரீதியில் உபயோகிக்க முடியாத நிலையில் கறுப்பு பணமாகப் பதுக்கி வைக்கிறார்கள். அவர்களுக்கான சந்தர்ப்பம் அமையும்போது அவற்றை சட்டங்களுக்கு அமைய பயன்படுத்தக்கூடிய பணமாக மாற்றிக்கொண்டு, தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள்.  

பணமோசடி (Money laundering)  

நாம் பயன்படுத்தும் துணி அழுக்கானவுடன், நாம் எப்படி அதனை தொடர்ந்து பயன்படுத்துவோம்? எப்படியும் அந்த அழுக்குத் துணிகளை சலவை செய்து சுத்தமாக்கியதன் பின்புதானே பயன்படுத்துவோம். அதுபோலத்தான் ஒருவரிடத்திலுள்ள கறுப்புப் பணத்தை சட்டரீதியாக பயன்படுத்திக்கொள்ள முடியாதநிலையில், அதனை வெள்ளையாக்கும் செயன்முறை அல்லது சட்டரீதியாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடியவாறு முன்னெடுக்கும் அனைத்துச் செயன்முறையும் சலவை செயற்பாட்டுக்கு ஒப்பான பணமோசடி செயன்முறையாக இனங்காணப்படுகிறது.  

பணமோசடி செயற்பாடுகள் பிரதானமான மூன்று வகைகளைக் கொண்டு இருக்கின்றன.  
1. Placement- கறுப்புப் பணத்தை சட்டரீதியான நிதி செயன்முறைகளின் வழியாக சட்ட அடிப்படையில் பயன்படுத்தக்கூடிய பணமாக அல்லது நிதி உபகரணங்களாக (காசோலை, திறைசேரி முறி) மாற்றிக்கொள்ளும் முறை. அதாவது சட்டரீதியில் பயன்படுத்த முடியாத பணத்தை சட்டரீதியில் பயன்படுத்தக்கூடிய வேறுவகை நிதி உபகரணங்களில் முதலீடு செய்தல்.   உதாரணம் - இலஞ்சமாக பணத்தை பெறாமல், அதற்குச் சமமான பெறுதியில் பங்குகளை அல்லது பரிசுகளை பெற்றுக்கொள்ளல்   

2. Layering - கறுப்புப் பணத்தை அதனது வருமான மூலத்திலிருந்து மறைத்து வெவ்வேறு வகை பரிமாற்றங்கள் மூலமாக சட்டரீதியான பணமாக மாற்றியமைத்தல்.  

3. Integration - சட்டவிரோத பணத்துக்கு சட்டரீதியான வருமான மூலங்களைக் காட்டி, வெள்ளைப் பணமாக மாற்றும் செயன்முறை.  

பெரும்பாலும் கறுப்புப் பணமானது, சட்டரீதியான பணமாக நிதி செயன்முறைக்குள் கொண்டுவரப்படும் பிரதான மூன்று வழிமுறைகளாக மேற்கூறியவை இருக்கிறது. இந்த வழிமுறைகளை அடிப்படையாகக்கொண்டுதான், நிதி வல்லுநர்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்காக போலி நிறுவனங்களை (Shell Companies) உருவாக்கி அவற்றில் கொடுக்கல் வாங்கல் செயன்முறை இடம்பெறுவதாகக் காட்டி, கறுப்புப் பணத்தை சட்டரீதியான பணமாக மாற்றிக்கொள்கிறார்கள். அண்மைக்காலத்தில் வெளிச்சத்துக்கு வந்த “பனாமா விவகாரம்” கூட இதனை ஒத்த ஒரு விடயமே ஆகும்.   

அழுக்கான பணம் (Dirty Money)  

பணத்தின் இருபெரும் கூறாக நாணயங்களையும் பணத்தாள்களையும் சொல்லலாம். இதில் நாணயங்கள் பயன்பாட்டின் விளைவாக அழுக்காவதில்லை. மாறாக, பணத்தாள்களை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதன் விளைவாக அழுக்கடைந்து பயன்பாட்டுக்கு உதவாதநிலையை அடையக்கூடும். அழுக்கான பணம் என்பதில் மேற்கூறியதைத்தான் சொல்லப் போகிறோம் என்றால் உங்கள் தவறான எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். 

அழுக்கான பணம் என்பது பயன்பாட்டில் கறைபடியும் பணத்தைக் குறிப்பது அல்ல. ஏதேனும் சட்டவிரோதமான முறைகளின் ஊடாகக் கிடைக்கப்பெறும் வருமானம் அல்லது பணமாகும். உதாரணமாக, போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், ஆயுதக் கடத்தல், இலஞ்ச ஊழல் மூலம் பெறப்படும் பணம் இந்தவகைக்குள் உள்ளடக்கப்படுகிறது.

அழுக்கு பணமானது, எந்தவொரு சட்டரீதியான வருமான மூலத்தை கொண்டிருக்காததுடன், அவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கணக்குகளுக்குள் உட்கொணரப்படுவதில்லை. எனவே, அரசினால் சட்டரீதியாக அங்கிகரிக்கப்பட்ட எந்தவொரு நிதிநிறுவனங்களிலும் இந்தவகை பணத்தைப் பெறவும் முடியாது. வைப்பு செய்யவும் முடியாது. ஆனால், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி இவற்றை சட்டரீதியான பணமாக மாற்றியமைக்க முடியும்.  

பணமோசடியைத் தடுக்கும் இலங்கையின் சட்டம்  

இலங்கையில் பணமோசடி செயற்பாடுகள் இடம்பெறுவதைத் தடுக்கும் நோக்கில், 2006ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க பணமோசடி தடுப்பு சட்டமானது மேம்படுத்தப்பட்ட வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சட்டத்தின் பிரகாரம், “ஏதேனும் பரிவர்த்தனை அல்லது ஏதேனும் சொத்தொன்று சட்டத்துக்கு புறம்பானவகையில் இலங்கைக்குள் உருவாக்கப்பட்டு இருப்பின், ஏதேனும் பரிவர்த்தனை அல்லது ஏதேனும் சொத்தொன்று சட்டத்துக்கு புறம்பானவகையில் இலங்கைக்கு வெளியே எடுத்துச் செல்லப்பட்டு இருப்பின் அல்லது இலங்கைக்கு வெளியே முதலீடு செய்யப்பட்டிருப்பின் அவை அனைத்துமே பணமோசடியாக இனங்காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது”.  

இலங்கையில் பணமோசடி சட்டத்தின் தேவை ஏற்பட காரணமே, இலங்கை போன்ற நாட்டை இங்குள்ளவர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தமது கறுப்புப் பணத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்வதற்காக பயன்படுத்த ஆரம்பித்தமைதான். இதனைத் தவிர்க்கவும், நிதிகொள்கையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும் இந்த சட்டம் அமுலுக்கு வந்தது.

சட்ட உருவாக்கத்தின் பின்பும் காலகாலமாக, பணமோசடி செயற்பாடுகள் இடம்பெறுவதும், அவை கண்டறியப்பட்டு உரியவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதும் வாடிக்கையாகவும் இருந்தே வந்திருக்கிறது. சிலவருடங்களுக்கு முன்னதாக இடம்பெற்ற பணமோசடி விவகாரம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.   

இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி முறி ஊழல் விவகாரத்தில், இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்புபட்டுள்ளார் என்ற செய்திகள் வெளிவந்ததும், அதற்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததும் நாம் அறிந்ததே.

இதன்போது, இடம்பெற்ற கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் நிதி அமைச்சரின் நிறுவனமொன்றை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் கணக்காளர் சாட்சியமளிகையில், ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு இருந்தார். அது, பணமோசடி தடுப்பு சட்டத்தின் பிரகாரம், ஒரு பணமோசடி நிகழ்ந்ததற்கான வலுவான ஆதாரங்களைக் கொண்ட ஒரு நிகழ்வாகும். நிதி அமைச்சர் மேற்கூறிய ஊழலுடன் தொடர்புடைய ஆடம்பர வீட்டைக் கொள்வனவு செய்வதற்கான பணம் வந்த முறை தொடர்பானதாகும்.

அதாவது, வீட்டைக் கொள்வனவு செய்வதற்கான பெறுமதியில் கிட்டத்தட்ட 100 மில்லியன் ரூபாய் ரவி கருணாநாயக்க அவர்களது நிறுவனத்தில் உரிமையைக் கொண்டுள்ள மற்றுமோர் உரிமையாளரால் 5,000 பணக்கட்டுக்களாகக் கொண்டுவரப்பட்டு நிறுவனத்தின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அந்தப் பணத்தை பயன்படுத்தியே வீட்டைக் கொள்வனவு செய்தாகும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், அவர் குறிப்பிடுகையில் இப் பெருந்தொகைப் பணமானது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கணக்குகளுக்குள் உள்ளடக்கப்படவில்லை என்பதுடன், குறித்த பணம் வந்த மூலத்தையும் அவர் அறிந்திருக்கவில்லை என சாட்சியமளித்து இருந்தார். குறித்த கணக்காளர் நீண்டகாலமாக வங்கியொன்றில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர் என்பது விசேட அம்சமாகும்.  

மேற்கூறிய உதாரணத்தில் கொண்டுவரப்பட்ட பணமானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் பதிவுகளைக் கொண்டிருக்கவில்லை. இது பணமோசடி தடுப்பு சட்டத்தின் 35ஆம் பிரிவின் உள்ளடக்கமான இலஞ்ச பிரிவு, பணபரிமாற்ற கட்டுப்பாட்டு சட்டம் ஆகியவற்றின் பிரகாரம் கறுப்பு பணமாக உறுதிசெய்யப்பட்ட பணமாகும்.

இத்தகைய பெரிய தொகை நாட்டுக்குள் எவ்வித பதிவுகளும் இல்லாமல் கொண்டுவரப்பட்டதே தவறாகும். இது பணமோசடி தடுப்பு பிரிவு சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட நிதி நுண்ணறிவு பிரிவினால் (Financial Intelligence Unit) கண்டறியப்பட்டிருக்க வேண்டும் அல்லது அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு எதுவுமே இடம்பெறவில்லை என்பதும், சட்டத்தின் பிடியில் இவ்வளவு பெரும்தொகை பணம் சிக்கிக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியம்தான்!  

குறிப்பாக, இலங்கையின் நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்க கடமையாற்றிய சந்தர்ப்பத்தில் அவரது நிறுவனத்தின் (இந்த நிறுவனம் நிதி அமைச்சரின் பாரியார் மற்றும் அவரது மகள் ஆகியோரால் தற்போது நிர்வகிக்கப்படுகிறது) மூலமாக இந்த பெரும்தொகை பணமானது எவ்விதமான பரிசோதனைகளுமின்றி நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை நமது நாட்டின் சட்டதிட்டங்களையும், அதுசார் துறைகளின் வினைத்திறனையும் கேள்விக்குள்ளாக்குகிறது. 

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பது போல, குறித்த பணம் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்டு சட்டரீதியான பணமாக மாற்றப்படும்வரை எதையுமே கண்டறியாத நமது பொறுப்பு வாய்ந்த அமைப்புகள், வேறு ஒரு வழக்கின் விளைவாக இந்த செய்தி வெளிவந்தபின்பு அதுதொடர்பில் சிந்திக்கத் தொடக்கி இருக்கிறது. இல்லையேல், இத்தகைய பணவிவகாரம் முழுமையாகவே மூடி மறைக்கப்பட்டிருக்கும் அல்லது கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்கும்.  

மேலே கூறிய இவ் உதாரணம், நாம் பயன்படுத்தும் பணத்துடன் சட்டவிரோதமான பணம் சட்டரீதியாக ஒன்டறக்கலப்பது தொடர்பான சிறு உதாரணமாகும். தற்போது இலங்கையில் தேர்தல் காலமாக உள்ளதால், மீளவும் இந்தக் கறுப்புப்பணம் இலங்கையில் சர்வசாதாரணமாக வெளிவரத்தொடங்கியிருக்கும்.

குறிப்பாக, இலங்கையின் அரசியலில் உழைத்த கறுப்பு பணத்தை தமது அடுத்த அரசியல் நகர்வுகளுக்கு அரசியல்வாதிகள் பயன்படுத்த தொடங்கியிருப்பார்கள். இப்படியாக, நாம் அறியாமலே பல்வேறு கொடுக்கல்வாங்கல்கள் நடந்திருக்கக்கூடும் அல்லது நடக்கக்கூடும். அதன் விளைவாக்கம் வெளிக்கொண்டரப்பட்ட சட்டவிரோத பணம் சிலவேளைகளில் நம் கைகளில் புழங்கியிருக்கக்கூடும்.

எனவே, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமது கைகளில் பணம் புரளும்போது, அந்தப் பணத்தின் நம்பகத்தன்மையையும் அதன் மூலம் தொடர்பில் உறுதியாகவும் அறிந்திருப்பது அவசியமாகிறது. இல்லையெனில், இந்தப் பணம் உங்களை அறியாமலேயே, உங்கள் கைகளையும் அசுத்தப்படுத்தி விடக்கூடும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .