2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

நெருக்கடி நிலைமையிலிருந்து பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்

Gavitha   / 2020 நவம்பர் 16 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுதினன் சுதந்திரநாதன்

எதையும் அழித்து விடுவது மிகவும் எளிதானது. ஆனால் உருவாக்குவது என்பது, மிகவும் கடினமான ஒன்றாகும். தற்போது, இலங்கையின் பொருளாதார நிலைமையும் அத்தகையவொரு நிலையில்தான் உள்ளது.

2020ஆம் ஆண்டின் பெரும்பாலான பகுதி முழுவதுமே, கொரோனா வைரஸ் அச்சத்துடன், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை இழந்தே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தனிநபர் வருமானம் தொடக்கம் இதுவரை காலமும் தங்கியிருந்த சுற்றுலா, சேவைகள் துறை வருமானம் என்பன பெருத்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கு ஒரு பொருத்தமான வரவு-செலவுத் திட்டம் இல்லாமல், ஒரு குழப்பமான அரசியல் மாற்றங்களுடன், நாள்களைக் கடத்தியிருக்கிறோம். தற்போது 2021ஆம் ஆண்டுக்கு ஒரு முழுமையானப் பாதீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

தற்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கத்தின் மிகப்பெரும் பணியாக இருக்கப்போவது, ஆசியால் நெருக்கடியின் விளைவாலும் கொரோனா காரணமாகவும் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாகும். இந்தப் பொருளாதார சீரமைப்பை மிகச்சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதற்கு, சர்வதேசத்தின் நம்பிக்கையை மீளவும் கட்டியெழுப்புதல், சென்மதி சமநிலையைப் பேணுதல், பொருத்தமான, தெளிவான பேரினப் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் என, மேற்கூறிய முக்கிய மூன்று விடயங்களையும், பொருத்தமான முறையில் நடைமுறைப்படுத்தல் அவசியமாகிறது. இவற்றுடன் கொரோனாவுக்கு, இலங்கை பாதுகாப்பான நாடு எனும் நிலையைக் கட்டியெழுப்புவதும் அவசியமாகிறது. கடந்த 2020இன் முற்பகுதியுடன் ஒப்பிடுமிடத்து, நம் நிலமை தற்போது கைமீறிப் போயிருப்பதை உணர முடிவதே இதற்கான காரணமாகும், 

சர்வதேச சமூகத்தின் மத்தியில் தற்போது இழக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையை மீளவும் கட்டியெழுப்புவது என்பது, மிக இலகுவான காரியம் அல்ல. இந்த நம்பிக்கையை மீளப்பெறும் செயற்பாடும், இதன் முக்கியத்துவதுமும், இலங்கை 2021ஆம்  ஆண்டில் மீளச்செலுத்தவுள்ள கடன்களுக்கும் நாட்டின் நாணயப் பெறுமதியின் உறுதிப்பாட்டுக்கும் மிக அவசியமாகும். அத்துடன், மீளவும் சர்வதேசத் தொடர்புகளையும் நம்பிக்கைகளையும் உறுதிப்படுத்துவதன் மூலமாக, சர்வதேச வாணிபம், வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஆகியவற்றைப் படிப்படியாக பெற்றுக்கொள்ள முடிவதுடன், தற்போது வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையை மீளமைத்து, நமது அந்நிய வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் இது மிகப்பெரும் வகிபாகத்தைக் கொண்டிருக்கும். அதுமட்டுமல்லாது, நாட்டின் அரசியல் குழப்பநிலைகள் ஏற்படுவதற்கு முன்பாக, இலங்கைக்கு வழங்குவதென்று உறுதி வழங்கப்பட்டு, அரசியல் குழப்பநிலைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க, ஜப்பான் நாடுகளின் நிதிகளை மீளவும் பெற்றுகொள்ள உதவுவதுடன், நாட்டில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளை தங்குதடையின்றி மேற்கொள்ளவும் உதவும்.

சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் மூலமாக, நாட்டின் கடன்தரப்படுத்தல் நிலைமையில் ஏற்பட்டுள்ள தரவீழ்ச்சியை மீளவும் முன்னேற்றகரமானப் பாதைக்கு நகர்த்த முடிவதுடன், அதை அடிப்டையாகக்கொண்டு எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு நமக்குத் தேவையான மிகப்பெருமளவிலான வெளிநாட்டு நேரடி முதலீடுகளையும் சாதகமான முதலீட்டு நிலைமைகளின் மூலமாக பெற்றுக்கொள்ளக் கூடியதாகவிருக்கும்.

நாட்டில் மிகவும் குழப்பகரமான நிலையிலுள்ள பொருளாதார கொள்கைகளை மீளவும் மிகச்சரியாகவும் பயன்தரக்கூடிய வகையிலுமாக நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அத்துடன், நாட்டின் பொருளாதார செயல்பாடுகளுக்கு தற்போதைய நிலையில் நாட்டுக்கு நன்மை விளைவிக்கக்கூடிய, மிகக்குறுகிய பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகவுள்ளதுடன், அதைச் சார்ந்ததாக 2025ஆம் ஆண்டை நோக்கியதாக, நாட்டின் பொருளாதாரப் பேண்தகுநிலையை பேணக்கூடியத் தூரநோக்குக் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

மேற்கூறியவாறு செயற்படுவதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதுபோலாக, செயற்படுவதற்கும் உகந்த பாதீட்டை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். நாட்டைக் கொண்டு நடாத்துவதற்கு எதிர்வரும் பாதீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மிக விரைவாக நாட்டை இந்தப் பொருளாதார சிக்கல் நிலைமைகளுக்கிலிருந்து விடுவிக்கக்கூடிய 2021ஆம் ஆண்டுக்கான பாதீட்டை, பொருத்தமான திருத்தங்களுடன் நடைமுறைக்கு கொண்டுவருவது அவசியமாகிறது. 

அத்துடன், நாட்டின் வர்த்தகக் கொள்கையில் மாற்றங்களை கொண்டுவருவது அவசியமாகிறது. தற்போதைய நிலையில், இலங்கையின் ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகள், ஏனைய நாடுகளுடனான வர்த்தகக் கொள்கையில் காணப்படும் முரண்பாடுகள் தீர்க்கப்படவேண்டியது அவசியமாகிறது. இதன்மூலமாக, வெவ்வேறு நாட்டின் முதலீட்டாளர்களின் முதலீடுகள் நாட்டுக்குள வருவதுடன், சீனா போன்ற நாடுகளை மாத்திரம் சார்ந்திருக்கும் இலங்கையின் எதிர்காலத்துக்கு தீர்வு கிடைக்கும். இதன்காரணமாக, எதிர்வரும் காலத்தில் ஏதேனும் அரசியல் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டாலும் கூட, நாட்டின் பொருளாதார சூழலானது பல்வகைமைப்படுத்தப்பட்டு தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி, மோசமான நிலைமைகள் போன்றவற்றுக்கு சமமான விளைவுகளை கொண்டிருக்காத நிலையைக் கொண்டிருக்கும்.

தற்போதைய கொரோனா நிலைகாரணமாக, கிட்டத்தட்ட இந்த இறக்குமதிகள் முழுமையாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஏற்றுமதிகளுக்கு போதுமான சந்தை அமையவில்லை. இந்த அரசாங்கத்தின் அண்மைய நடவடிக்கைள் அனைத்துமே மீண்டுமொருமுறை நாட்டை சீனாவுக்கு அடகுவைத்து போலாக இருக்கிறது. எனவே, இந்தக் குழப்பமான சூழ்நிலைக்கு மத்ஹடியில் எப்படி ஆக்கபூர்வமான திட்டங்கள் 2021ஆம் ஆண்டு பாதீட்டில் வரப்போகிறது என்பதே பெரும் கேள்விக்குறியாகும். 

2021ஆம் ஆண்டுக்கான பாதீடு நீண்டகால அபிவிருத்தியை அடிப்படையாக கொண்டதாக இருக்குமெனவும், அது மக்களுக்கு பல்வேறு நம்பிக்கைகளை கொண்டு வருமெனவும் 2020ஆம் ஆண்டுக்கான பாதீட்டு உரையில் நிதி அமைச்சரும், பிரதமருமான மகிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். ஆனால், அவர் சொல்வதைப்போல மக்களுக்குத் தீர்வைக் கொண்டு வருகின்ற நிலையில் இலங்கை பொருளாதாரம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறிதான்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்தபோது, மக்களின் நலனில் அக்கறைக் கொண்ட ஒருவராகக் காட்டிக்கொள்ள பெறுமதிசேர் வரி, Payee வரி ஆகியவற்றில் மிகப்பெரும் குறைப்பைச் செய்தார். இந்தக் குறைப்பின் மூலமாக, மக்களின் கைகளில் அதிகமான பணம் போய் சேரும். அவர்கள் அதைப் பயன்படுத்தி, கொடுக்கல்- வாங்கல்களை செய்வார்கள். இதனால் பண சுழற்சி அதிகரித்து, நாட்டில் ஒரு பொருளாதார மாற்றத்தைக் காட்டி மக்களை ஏமாற்றிவிடலாம் என்பதாக, அந்த கணக்கு இருந்தது. ஆனால், கொரோனா அதற்கு எதிரானக் கணக்கைப் போட்டது. வரி குறைப்பால் நிறுவனங்கள், மக்களிடம் போய் சேர்ந்த பணம், கொரோனா காராணமாக பெருமளவில் வெளியே வரவில்லை அல்லது தேவையான மக்களிடம் போய் சேர்வதாக இருந்திருக்கவில்லை. இதனால், நடுத்தர, வறிய மக்களும், சிறிய நடுத்தர நிறுவனங்களும் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொண்டு இருக்கிறது. கடந்த மே மாதம் முதல் இலங்கை மத்திய வங்கி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வழங்கிய கடன்களை கூட மீள செலுத்த முடியாத நிலையில் இரண்டாவது கொரோனா அலையின் பாதிப்பு இலங்கையை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், இந்த மிக நெருக்கடியான காலகட்டத்தில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது போல எப்படி பாதீட்டை, இந்தப் புதிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தப் போகிறது என்கிற கேள்வி எல்லோருக்குமே இருக்கிறது.

இதற்கான பதில், நாளை (17) தெரிந்ததும், முழுமையாக அது தொடர்பில் பார்க்கலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .