2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மட்டு. மாவட்ட சிறிய நடுத்தர முயற்சியாளர்களுக்கு கணக்குப் பதிவுப் பயிற்சி

Editorial   / 2018 மார்ச் 13 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 - கே.எல்.ரி. யுதாஜித்  

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகக் கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில், நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான இலகுபடுத்தப்பட்ட கணக்குப் பதிவு பயிற்சி நெறியொன்று அண்மையில், மட்டக்களப்பு கோப் இன் விடுதியில் நடைபெற்றது.

ஜீ.ஐ.இசட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிறிய நடுத்தர முயற்சியாளர்களின் போட்டித்தன்மையான வியாபார அணுகுமுறைக்கு ஏற்ற, நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய சூழலை ஏற்படுத்தல் திட்டத்தின் கீழ், இந்த இலகுபடுத்தப்பட்ட கணக்குப்பதிவுப் பயிற்சி நடாத்தப்பட்டது.

சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.எம்.நளீம் தலைமையில், சம்மேளனத்தின் அங்கத்துவ நிறுவனங்களை வளப்படுத்தும் வகையில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் , ஜீ.ஐ.இசட் நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் டானி கொன்ஸ்ரரைன், சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.குகதாசன், தேசிய தொழில்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கொழும்பு பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் பட்டயக்கணக்காளர் கே.இளங்கோ வளவாளராக் கலந்து கொண்டார்.

இப்பயிற்சியின் போது, நிறுவனம் ஒன்றின் கணக்காளர், எவ்வாறு கணக்குப் பதிவுகளைப் பேண முடியும். நிறுவனக் கணக்குப் பதிவுகளில் சிக்கல் ஏற்படுதலைத் தடுத்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் விளக்கங்கள், பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தகக் கைத்தொழில் விவசாய சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட 12ஆவது பயிற்சிநெறி இதுவாகும்.

கடந்த ஒன்பது மாதங்களாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சிறிய, நடுத்தர முயற்சியாளர்களின் போட்டித்தன்மையான வியாபார அணுகுமுறைக்கு ஏற்ற, நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய சூழலை ஏற்படுத்தல் திட்டத்தின் கீழ், தேசிய சிறிய நடுத்தரக் கைத்தொழில் கொள்கை வரைபு தொடர்பான விளக்கமளிப்புச் செயலமர்வு கடந்த வருடத்தில் நடத்தப்பட்டிருந்தது.

அதையடுத்து, சிறிய நடுத்தர முயற்சியாளர்களின் துறைசார் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் கைத்தறி நெசவாளர்கள், உள்ளூர் உணவு உற்பத்தித் துறையினர், அரிசி ஆலையாளர்கள், துறைசார் தொழில்நுட்பப்பயிற்சிகள், பெறுமதிசேர் உணவு உற்பத்தி, உணவுச் சுகாதார முறைகள், சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் நடத்தப்பட்டன.

அதேபோன்று உள்ளூர் உற்பத்தியாளர்களின் சந்தைப்படுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் மொத்த வியாபாரிகள்,  விநியோகஸ்தர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டு, உற்பத்தியாளர்களின் உற்பத்திப் பொருள்களைக் காட்சிப்படுத்தி, அவர்களுக்கான சந்தைப்படுத்தலை ஏற்படுத்திக் கொடுத்தல் தொடர்பாகவும் ஆராயப்பட்டிருந்தது.

அத்துடன், கைத்தறி நெசவாளர்களுடைய தொழில் துறை ஊக்குவிப்பதற்காக சுற்றுலாத்துறையினருடைய ஈடுபாட்டுக்காக பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதிகள் அமைப்பினருடனான கலந்துரையாடல் மற்றும் காட்சிப்படுத்தலும் மேற்கொள்ளப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .