2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கு பயணிக்க இருந்தவர்களின் நிலை

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக பயணிக்க தயார் நிலையிலிருந்த சுமார் 8000 – 9000 இலங்கையர்கள் தற்போது உலகளாவிய ரீதியில் பரவும் COVID-19 தொற்று காரணமாக சிக்கல் நிலையை எதிர்நோக்கியுள்ளனர். இதில் பலர் உள்நாட்டில் தாம் மேற்கொண்ட தொழில்களிலிருந்து விலகி, வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்கு ஆயத்தமாகியிருந்ததுடன், இதற்காக உள்நாட்டில் இயங்கும் பயண முகவர்களுக்கு கட்டுப்பணத்தையும் செலுத்தியுள்ளனர்.

இந்த நிலைமை தொடர்பில் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சம்மேளனத்தின் உதவிச் செயலாளர் பி.எஸ்.செல்வரட்னம் தெரிவிக்கையில், ”எமது வர்த்தக செயற்பாடுகள் தற்போது நெருக்கடியான நிலையை எதிர்கொண்டுள்ளன. தற்போது காணப்படும் சூழலில் எம்மால் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அதாவது நேர்காணல் மற்றும் தெரிவு செய்தல் போன்ற எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாது.” என்றார்.

COVID-19 பரவுவதை கட்டுப்படுத்தும் வரையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்கள் பயணிப்பதை மார்ச் 13 ஆம் திகதி முதல் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தடை செய்துள்ளது.

”இந்த நிலைமை காரணமாக, மாதாந்தம் சுமார் 8000 – 9000 பேர் வரை வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக செல்வோர் தற்போது போக முடியாத ஒரு நிலையை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களின் வீசா அனுமதிகள் கிடைத்துள்ளன. விமானச் சீட்டுகளும் தயார். ஆனாலும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன, ஏனைய நாடுகளும் வருகையை தடை செய்துள்ளன.” என மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுச் செல்வோரில் தொண்ணூறு சதவீதமானவர்கள் முகவர் ஒருவரினூடாக பயணிக்கின்றனர். ”முகவர் நிறுவனங்களுக்கு வருமானமில்லாத காலப்பகுதியில், அவற்றினால் இயங்க முடியாது. ஊழியர்களுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியாது. தொழில் வழங்குநர்களிடமிருந்து எமக்கு வேலை வாய்ப்புகள் பற்றிய அறிவித்தல் எதுவும் கிடைப்பதில்லை. இதனால் மாதாந்தம் நாம் வெளிநாடுகளுக்கு அனுப்பியவர்களின் எண்ணிக்கை தற்போது தடைப்பட்டுள்ளது.” என்றார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக பயணிப்பதற்கு தயாராக இருந்த நபர்கள் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். ஏற்கனவே உள்நாட்டில் தாம் புரிந்த பணிகளிலிருந்து விலகியுள்ளனர். எனவே, அவர்களின் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட கால அடிப்படையில் கருதினால், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் வெளிநாட்டு நாணய பரிமாற்றத்தில் இந்த சூழ்நிலை கடும்பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த நிலையை கவனத்தில் கொண்டு, அரசாங்கத்தினால் நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும் என செல்வரட்னம் குறிப்பிட்டார். குறிப்பாக வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக பயணமாக தம்மை தயார்ப்படுத்தும் நடவடிக்கையில் உள்நாட்டில் தொழிலை இழந்தவர்களுக்கு வருமானமீட்டக்கூடிய வசதி அடங்கலாக நீண்ட கால கடன் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்றார். மேலும், வீசா மீள்-வழங்கலுக்கு வெளிநாட்டு தூதுவராலயங்களினால் மேலதிக கட்டணங்கள் அறவிடப்படக்கூடாது. அத்துடன் விமான சேவை வழங்குநர்கள் விமான டிக்கட்களை இரத்துச் செய்யாமல், அவற்றை மீள வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

நாடு முழுவதிலும் 800 அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் காணப்படுகின்றனர். இதில் 300 பேர் அங்கீகாரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சம்மேளனத்தின் அங்கத்துவத்தை கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X