2024 மார்ச் 28, வியாழக்கிழமை

4000 பேர் வந்தனர், இன்னும் அதிகம் பேர் வருவர்

S.Sekar   / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

இலங்கையின் சர்வதேச விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு மாத காலப்பகுதியில் இலங்கைக்கு 4000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இதுவரையில் வருகை தந்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றுலா அபிவிருத்தி பணியகம் தெரிவித்துள்ளது.

தேசத்தின் பொருளாதாரத்தில் முக்கிய அங்கமாக சுற்றுலாத் துறை காணப்படும் நிலையில், இந்தத் துறை எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுத்து, துறையை மீட்டெடுப்பதற்கு துறையின் சகல தரப்பினரையும் தயாராகுமாறு ஜனாதிபதி அழைத்திருந்தார்.

கொவிட்-19 தொற்றுப் பரவல் காணப்படும் நிலையில், சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து, சுகாதாரம் தொடர்பான கட்டுப்பாடுகளுக்கமைய, பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, இந்தத் துறையை முன்னேற்றுவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலி கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளதாக வெளி விவகார அமைச்சு அறிவித்திருந்தது. அதிக வீரியம் கொண்ட புதிய வகை கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், ஜனாதிபதியுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின் போது இந்தத் தளர்வை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. எவ்வாறாயிலும், ஐக்கிய இராஜ்ஜியத்திலிருந்து வருகை தருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதுடன், சுகாதாரத் தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டதற்கு அமைவாக பிசிஆர் பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படுவர்.

இந்நிலையில் சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சிக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆதரவுக்கு இலங்கை ஹோட்டல்கள் சம்மேளனத்தின் தலைவர் சனத் உக்வத்த நன்றி தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ள ஹோட்டல்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மொத்தமாக 204 ஹோட்டல்கள் நாடு முழுவதிலும் காணப்படுவதாகவும், இவற்றில் மொத்தமாக 11540 அறைகள் உள்ளதுடன், மொத்த அறைகளின் எண்ணிக்கையில் இது 30 சதவீதமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா நாடாக காண்பிப்பதற்கும், பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடாக ஊக்குவித்துப் பிரச்சாரம் செய்வதற்கும் செயற்குழு ஒன்றை சுற்றுலாத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமித்துள்ளார்.

இலங்கைக்காக விமான சேவைகளும் படிப்படியாக வழமைக்குத் திரும்புவதை காண முடிகின்றது. சுற்றுலாத் துறையின் மீட்சியில் விமான சேவைகளின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X