2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொருளாதார மீட்சி கவனம் செலுத்தப்பட வேண்டிய பிரதான தொழிற்றுறைகள்

ச. சந்திரசேகர்   / 2020 ஓகஸ்ட் 10 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தொடர்ந்து, பொருளாதாரத்தை மீட்சியடையச் செய்வதற்காகத் தொழிற்றுறைகளின் வளர்ச்சியை ஊக்குவித்து, தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான தேவை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. எவ்வாறாயினும், இவ்வாறான கொள்கைகள் வகுக்கப்படுவதனூடாக மாத்திரம், இலங்கைக்கு முன்னேற்றம் பதிவாகிவிடாது. மாறாக, உள்நாட்டு நிறுவனங்களை ஏற்றுமதிச் செயற்பாடுகளில் ஈடுபட ஊக்குவித்து, சர்வதேச பெறுமதிச் சங்கிலிகளுடன் இணைப்பதற்கு வழியேற்படுத்துவது அவசியமானதாகும்.   

இவ்வாறான பெறுமதிச் சங்கிலிகளுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு, 
கொவிட்-19 வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், புதிய வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கு, இலங்கை தனது வசதி வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டியுள்ளதுடன், போட்டிகரமானதாகத் திகழ்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.  

 அவ்வாறான சூழ்நிலையில், இலங்கையின் வளர்ச்சி வாய்ப்பை மேம்படுத்திக் கொள்வதற்கு, போட்டிகரத்தன்மையை மேம்படுத்துவது, தேசியக் கொள்கைகளின் தொடர்ச்சித் தன்மையை உறுதி செய்வது அடங்கலான, பரிபூரண தேசிய தொழிற்றுறைக் கொள்கை ஒன்றைச் செயற்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

அபிவிருத்திச் செயன்முறையின் ஆரம்பத்திலேயே, தொழிற்றுறைசார் கொள்கைகளை வெற்றிகரமாகச் செயற்படுத்தியிருந்ததனூடாக, ஹொங்கொங், சீனா, தென்கொரியா,  சிங்கப்பூர் போன்ற நாடுகள், தமது நாட்டுப் பொருளாதாரங்களைத் துரிதமாக மேம்படுத்தி, தொழிற்றுறைக்கு உயர் பெறுமதியைச் சேர்த்திருந்ததுடன், உயர்மட்ட அபிவிருத்தியை நோக்கி நகர்ந்திருந்தன. எவ்வாறாயினும், இலங்கையில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த தொழிற்றுறைசார் கொள்கைத் திட்டங்களினூடாக, நேர்த்தியான,  நிலைபேறான பெறுபேறுகள் நாட்டுக்கு கிடைக்கவில்லை. இதில் அவ்வாறான திட்டங்களினூடாக அனுகூலங்கள் கிடைப்பதற்கு முன்னதாகவே, அவை கைவிடப்பட்டிருந்தமை அல்லது அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தமையைக் குறிப்பிட முடியும்.   

 இலங்கையின் தொழிற்றுறைசார் செயற்பாடுகள் நான்கு உபதுறைகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்டுள்ளன. நிர்மாணம், அகழ்வு, சுரங்கப்பணி, உணவு பானங்கள்,  புகையிலை உற்பத்தி, ஆடைகள், ஆடைத் தொழிற்றுறை, தோற்பொருள்கள் உற்பத்தி போன்றன அவையாகும். எவ்வாறாயினும், இவ்வாறான உற்பத்திப் பொருள்களின் பெருமளவானவை உள்நாட்டுச் சந்தையில் பயன்படுத்தப்படுகின்றன. சில ஆடை உற்பத்திகள், நுகர்வோர் பொருள்கள் மாத்திரமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தேயிலை, இறப்பர், ஆடைத் தொழிற்றுறை போன்றவற்றைச் சேர்ந்த இலங்கையின் சில உற்பத்தியாளர்கள் சர்வதேச தரச் சான்றிதழ்களைப் பெற்று, தமது வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். வணிகச்சரக்கு ஏற்றுமதியில் குறைந்தளவு செயற்பாடுகளின் காரணமாக, ஆசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை தற்போதும் பின்தங்கிய நிலையிலுள்ளது. தொழிற்றுறைசார் உற்பத்தி, தொழிற்றுறைசார் ஏற்றுமதி போன்றவற்றில் குறைந்தளவு பன்முகப்படுத்தல் காரணமாக, உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உற்பத்தித் துறையில் குறைந்தளவு முன்னேற்றத்தைப் பதிவு செய்ய முடிந்துள்ளது. மூலதனப் பொருள்கள் போன்ற தொழிற்றுறைகள் பெருமளவில் ஈடுபாட்டற்றதாக அமைந்துள்ளன.  

எவ்வாறாயினும், போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை, தனது குறைந்த செலவிலமைந்த தொழிலாளர் அனுகூலத்தை, படிப்படியாக இழந்த வண்ணமுள்ளது. தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட பொருள்கள் என்பதிலிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட, தொழில்நுட்ப ரீதியில் முன்னெடுக்கப்படும் தயாரிப்புகள் துறையாக உள்நாட்டு ஏற்றுமதித் துறையை மாற்றியமைப்பது தொடர்பில் நாடு கவனம் செலுத்த வேண்டும்.   

ஒருசீரான தொழிற்றுறைசார் அபிவிருத்தி மூலோபாயமொன்றுக்கான தேவையை இவை உணர்த்துகின்றன. வியாபாரங்களுக்கு ஊக்கமளிக்கும், முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிக்கும்,  சந்தை மறுசீரமைப்புகளை மேற்கொள்ளக்கூடிய விடயங்களும் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக இனங்காணப்பட்ட தொழிற்றுறைகளில் காணப்படும் வாய்ப்புகளை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும். பல நாடுகளில், உயர் பெறுமதி சேர்ப்பு, ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கு காணப்படும் வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள், வருமான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கக்கூடிய விடயங்களை கவனத்தில் கொண்டு, தமது தொழிற்றுறைகளை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்தி அவற்றை ஊக்குவித்த வண்ணமுள்ளன. தேசிய தொழிற்றுறைக் கொள்கையில் இந்த விடயங்கள் தீர்க்கப்பட்டு, சகல பங்காளர்களுடனும் இணைந்து தொழிற்றுறைசார் அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலுக்கமைய தொடர்ச்சியாக இவை அமல்ப்படுத்தப்பட வேண்டும். தேர்தல் தற்போது முடிவடைந்து புதிய நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டுள்ளமையால், இது போன்ற தொழிற்றுறைசார் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். நீண்ட காலத்துக்கு அவற்றில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், முறையாகச் செயற்படுத்தப்பட வேண்டும். இவ்வாறான வழிமுறைகள், ஊக்குவிப்புகள், வழிகாட்டல்கள் எதுவுமின்றி வெறுமனே, சகல நுகர்வுப் பொருள்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்யுமாறு உயர்மட்டத்திலிருந்து எழும் அழுத்தங்களால், இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதாரச் சவால்களுக்குத் தீர்வைக் கண்டுவிட முடியாது. குறிப்பாக, நாடு பாரிய கடன் சுமையைக் கொண்டுள்ளது. நாட்டின் பொருளாதார மீட்சிக்கான எதிர்காலம் என்பது, ஏற்றுமதி, புதிய முதலீடுகள் போன்றவற்றில் பெருமளவில் தங்கியுள்ளது. 

குண்டர்களையும், மோசடிக்காரர்களையும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு துணை போவோருக்கும் நாட்டின் அபிவிருத்தியில் ஏதேனும் வகையில் பங்களிப்பு வழங்கக்கூடிய வகையில் பொறுப்புமிக்க பதவிகளில் நியமிப்பது, நாட்டை மேலும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .