2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’இணக்க அரசியல் என்பது மிகவும் கடினமானது’

George   / 2017 ஜூன் 04 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

“அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக உழைப்பதைப் போன்று, மக்களின் அன்றாட தேவைகளையும் நிறைவு செய்வதற்காக உழைப்பதும், மக்களால் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிகளின் அவசியமான கடமையாகும்” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவ சமூக நீதி மக்கள் அமைப்பின் அமைப்பாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்தார்.

வட்டக்கச்சி,  மாயவனூர்,  இராமநாதபுரம் ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், “மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்த நிலையில் வாழ்வின் சுமைகளுக்கு முகம் கொடுக்க முடியாது திணறுகிறார்கள். ஜனாதிபதி, வர்த்தமானி அறிவித்தல் மூலம் அரிசியின் விலையை 80 ரூபாயாக பிரகடனப்படுத்தியுள்ள போதும்,  இன்றும் இங்குள்ள கடைகளில் அரிசி, 110 ரூபாயாக விற்கப்படுகின்றது.

“இதனை சட்டம் மூலம் தடுப்பதற்கு முடியாதுள்ளது.இதனைப் போன்று தான் பொருட்கள்,  சேவைகளினதும் நிலைமையும் காணப்படுகின்றது. நல்லாட்சி மீது நம்பிக்கை வைத்த மக்கள் ஏமாற்றப்படுகின்றனர்.

“கிளிநொச்சியில் ஆடைத்  தொழிற்சாலை ஒன்று இயங்குகிறது. உழைப்புச் சுரண்டல், தொழிலாளர் நலன்கள் பேணப்படாமை போன்ற பலவித குறைபாடுகள் இருந்தாலும், இன்று மூவாயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

“யுத்ததால் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற இவ்வாறான முதலீடுகள் இன்று அவசியமாகிறன. புலம்பெயர்ந்த மக்கள், பாதிக்கப்பட்ட மாவட்டங்களை முன்னிலைப்படுத்தி இவ்வாறான முதலீடுகளை முன்னெடுக்க முன்வரவேண்டும்.

“மாயவனூர் கிராம மக்கள் புழுதியாற்று ஏற்று நீர்ப்பாசன மூலம் தமது வாழ்வாதாரம் அதிகமாக மேம்படும் என எதிர்பார்த்தனர். ஆனால் வரட்சி, உள்ளூர் மக்களின் ஆலோசனை,  சூழல் பாதுகாப்பு பற்றிய அக்கறையின்மை, நிபுணத்துவ ஆலோசனை போன்ற விடயங்களுடன் விரையமற்ற நீர் முகாமைத்துவம், மக்களுக்கு கட்டுபடியானசெலவு என்பன கருத்தில் எடுக்கப்பட்டு செயற்படுத்தப்படும் போது மட்டுமே, இவை மக்களுக்கு பயனுள்ளவையாக அமையும்.

“பாரதிபுரம்,  கிருஷ்ணபுரம் பகுதிகளிலும் விவசாயத்துக்கு நீர் வழங்கும் ஏற்பாடுகள் செய்யப்படின் மிகப் பெரிய பெறுமதியான பணப் பயிரான கறுவா செய்கை மூலம் அதிக வருமானத்தை ஈட்ட முடியும்.

“கடின உழைப்புக்கு தயரான மக்கள் உள்ள எமது மாவட்டத்தில் மக்களின் தேவைகள் வழங்கப்படுவதற்கான அரசியல் தலைமைகள் அவசியமாகின்றன. அரசியல் உரிமை போராட்டத்துடன், மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதும் அவசியமாகின்றது. இது மக்கள் பிரதிநிதிகளின் கடமையுமாகும்.

“வரட்சி மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற இடர்களின் போது, மக்களுக்குரிய நிவாரணம் பெற்றுக் கொடுப்பதும் மக்கள் பிரதிநிதிகளின் கடமையும் பொறுப்புமாகும்.

“இணக்க அரசியல் என்பது சரணடைதல் என முன்பு பலர் குறிப்பிட்டு இருந்தனர். எதிர்ப்பு அரசியலை விட, இணக்க அரசியல் என்பது மிகவும் கடினமானது. பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கத்துக்குள் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் காரணமாக, நான் பல்வேறு நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் சந்தித்துள்ளேன்” என்றார்.

கதிரவேலு கெங்காதரன் தலைமையில் நடைபெற்ற இம்மக்கள் சந்திப்பில், சமத்துவ சமூக நீதிகான மக்கள் அமைப்பு செயற்பாட்டாளர் அன்டன் அன்பழகனும் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .