2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’ஓய்வுநிலை மதிப்பீட்டாளர்களை நியமிக்கவும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை அதிகரிக்க ஓய்வுநிலை மதிப்பீட்டாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டுமென, வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். 

வவுனியா பிரதேச செயலகத்தில் நேற்று (10) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றங்கள் குறிப்பாக, பிரதேச சபைகள் போதிய வருமானமின்றி பொதுமக்களுக்கான அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் ஆதனவரி அறவீடு சரியாக நடைபெறுவதில்லையெனவும் நீண்ட காலமாக பிரதேசசபைகளின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் ஆதன மதிப்பீட்டு பணிகள் மேற்கொள்ளப்படவில்லையெனவும் குற்றஞ்சாட்டினார்.

போதிய மதிப்பீட்டாளர்கள் பணியில் இல்லையென்பதாக காரணம் சொல்லப்படுகின்றதெனத் தெரிவித்த அவர், எனவே ஓய்வுநிலை மதிப்பீட்டாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்து மதிப்பீட்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

அத்துடன், அவரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் வருமாறு,

01. வீட்டுத்திட்டம் வழங்கலில் வீடற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும். அதற்கு அடுத்ததாக, ஏற்கெனவே அரச, அரசசார்பற்ற நிறுவனங்களால் நீண்ட காலத்துக்கு முன்னர் வழங்கப்பட்ட அரை நிரந்தர வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.

02.ஓமந்தையில் அரச அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் இதுவரை எந்தவிதமான அபிவிருத்திப்பணிகளும் மேற்கொள்ளாதவர்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கி காணிகளை அபிவிருத்தி செய்ய பணிப்புரை வழங்கப்படல் வேண்டும். தவறும்படசத்தில், காணிக்காக காத்திருப்போர் பட்டியலில், பொருத்தமான பயனாளிகளை தெரிவுசெய்து அவர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்க வேண்டும்.

03.காணியற்றவர்களுக்கு புதிதாக காணிகள் வழங்கும் போது குடியிருப்பதற்காக வழங்கப்படும் மேட்டுக்காணிகளுக்கு மேலதிகமாக அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கைவிடப்பட்ட குளங்களை புனரமைத்து வயற்காணிகள் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும். இதற்கு வனவளத்திணைக்களம் ஒத்துழைப்பு வழங்குதல் வேண்டும். 

மேற்படி முன்மொழிவுகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதுடன், நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு துறைசார்ந்த திணைக்களங்களுக்கு தீர்மானங்கள் அனுப்பிவைப்பதாக முடிவெட்டப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .