2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கிரவல் கொண்டு செல்லப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 ஜனவரி 06 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - செட்டிக்குளம் வீதி வழியே மன்னாருக்குக் கிரவல் கொண்டு செல்லப்படுவதை நிறுத்துமாறு கோரி, அப்பகுதி மக்களால், இன்றைய தினம் (06) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது, செட்டிக்குளம்- உலுக்குளம் வீதியில் வீதித் தடையை ஏற்படுத்தி, கிரவல் கொண்டு சென்ற டிப்பர் வாகனங்களை வழிமறித்து, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

 இந்நிலையில், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்துக்கு வருகை தந்த செட்டிக்குளம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர், விடயங்களைக் கேட்டறிந்து கொண்டு, அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்கான ஏற்ற வழிமுறைகள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். 

 இதையடுத்து, குறித்த பகுதிக்கு வருகை தந்த செட்டிக்குளம் பிரதேச செயலாளர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார். 

இதன்போது, செட்டிக்குளம் - உலுக்குளம் வீதி, 2014ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட நிலையில், குறித்த வீதி ஊடாகவே மதவாச்சியில் இருந்து மன்னாருக்கு கிரவல் கொண்டு செல்லப்படுவதாகவும் செட்டிக்குளத்தில் கிரவல் அகழ்வுக்குப் புதிதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, அங்கிருந்த செல்லும் டிப்பர்களால் வீதி சேதமடைந்து வருவதாகவும், ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.  

செட்டிக்குளத்தில் இருந்து வவுனியாவுக்குச் செல்லும் மூன்று வீதிகளில், பூவரசங்குளம் ஊடாகச் செல்லும் வீதி, வீரபுரம் ஊடாகச் செல்லும் வீதி ஆகியன மிக மோசமாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தற்போது, உலுக்குளம் வீதி மாத்திரமே நல்ல நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். 

எனவே, குறித்த வீதி வழியே கிரவல் கொண்டு செல்வதைத் தடுக்குமாறு, ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். 

 இதனைக் கவனத்தில் கொண்ட பிரதேச செயலாளர், இந்த வீதியினூடாகக் கிரவல் கொண்டு செல்லப்படுவதற்கான வீதி அனுமதியைத் தடைசெய்யுமாறு, வவுனியா மாவட்டச் செயலாளர் ஊடாக அநுராதபுரம் மாவட்டச் செயலாளருக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்துவதாகத் தெரிவித்தார். 

அத்துடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கும் இவ்வீதியூடாக கிரவல் கொண்டு செல்வதற்கான அனுமதியை நிறுத்துமாறு, எழுத்து மூலம் அறிவிப்பதாகவும், பிரதேச செயலாளர் கூறினார்.    இந்நிலையில், செட்டிக்குளம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், குறித்த வீதியில் வேகமாகச் செல்லும் வாகனங்கள், வீதி ஒழுங்கைப் பின்பற்றாத வாகனங்கள் தொடர்பில் தாம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கிரவல் இன்றி வெற்று டிப்பர்கள் மாத்திரம் இவ்வீதியை பயன்படுத்த அனுமதிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு உறுதியளித்தார். 

இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு, அவ்விடத்தில் இருந்து கலைந்துச் சென்றனர். 

 எனினும், ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அங்கு பிரசன்னமாகிய இளைஞர்கள் சிலர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், 

ஒரு மாதகாலமாக இவ்வாறு கிரவல் கொண்டு செல்லப்படுவதாகவும் இந்த ஆர்ப்பாட்டம் பிரதேச சபை உறுப்பினரான ஜூட் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். 

ஆனால், அது எதையும் ஆராயாமல், செட்டிக்குளம் பிரதேச செயலகம் கிரவல் அகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், அவ்விளைஞர்கள் குற்றஞ்சாட்டினர். 

இது தொடர்பாகத் தாங்கள் பிரதேச சபை உறுப்பினராக உள்ள ஜூட்டிடம் கேட்டபோது, ஒரு மாதத்துக்கு முன்னதாக பிரேரணையொன்றை முன்வைத்ததாகவும் எனினும், சபையால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்ததாக, இளைஞர்கள் கூறினர். 

இது குறித்து, பிரதேச சபை உறுப்பினர் ஜூட்டிடம் வினவியபோது, அதற்குப் பதிலளித்த அவர், தான், ஒரு மாதத்துக்கு முன்னர் கொண்டு வந்த பிரேரணை தொடர்பில் தனக்கு எழுத்து மூலமாக எவ்வித பதிலும் வழங்கப்படவில்லையெனத் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X