2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காணாமல் போன வயோதிபர் சடலமாக மீட்பு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 10 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.என். நிபோஜன்

கடந்த மூன்று நாட்களாகக் காணவில்லை எனத் தேடப்பட்டு வந்த கிளிநொச்சி கனகாம்பிகைக் குளத்தைச் சேர்ந்த 80 வயதான மூத்தார்  இராசரத்தினம், கனகாம்பிகைக்குளம் பாடசாலைக்கு முன்பக்கமாக இருக்கும் வீட்டின் பாழடைந்த கிணற்றிலிருந்து வெள்ளிக்கிழமை (09) மதியம், சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

தனியாக வசித்து வந்த இவரைக் காணவில்லை என, கிராம வாசிகளால் தேடப்பட்டு வந்த நிலையில், குறித்த பாழடைந்த கிணற்றில் இவர் சடலமாக மிதப்பதனை அவதானித்த கிராம மக்கள் கிளிநொச்சிப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சிப் போலிஸார், கிளிநொச்சி குற்றத்தடயவியல் பொலிஸார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி  ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வயோதிபரின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
வயோதிபர், கையில் டொச் லைட்டை இறுக்கப் பிடித்தவாறு  இறந்துள்ளமையினால் கிணற்றில் விழுந்து  இறந்த ஒருவர் எவ்வாறு  குறித்த டொச் லைட்டை  கைவிடாமல் இறக்க முடியும் எனப் பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்தனர்.

அத்துடன், அவர் காணாமல் போய் 03 நாட்களான நிலையிலும் அவரது சடலத்தினைப் பார்க்கும் பொழுது இறந்து ஒரு நாட்களே ஆனது போன்று இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், வயோதிபர் காணாமல் போனமை தொடர்பிலும் அவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பிலும், வெளிநாட்டில் இருக்கும் அவரது மகள் மற்றும் மகனுக்கும் வெளி மாவட்டத்தில் வசித்து வரும் மனைவிக்கும், கிராம மக்களால் தகவல் வழங்கப்பட்ட போதும் அவர்கள் இன்னும் சம்பவ இடத்துக்குச் சமுகமளிக்கவில்லையெனக் கிராமவாசிகள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாகப்  பல கோணங்களில் கிளிநொச்சிப்  போலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .