2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சமையல் பாத்திரங்களை பார்த்து ஏங்கும் மாணவர்கள்

Menaka Mookandi   / 2016 மார்ச் 02 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

'உலக வங்கியினால் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்துக்கான பொருட்கள் களவு போவதால், அந்தப் பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் வெறுமையான சமையல் பாத்திரங்களைப் பார்த்து ஏங்குகின்ற பரிதாபகரமான செயற்பாடுகள் கண்டாவளை கோட்டத்துக்குட்பட்ட பாடசாலைகளில் அண்மைக்காலங்களில் இடம்பெறுவதாக' கோட்டக் கல்விப்பணிப்பாளர் வீ.இராஜகுலசிங்கம் கவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்து கூறுகையில்,

'பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதற்காக உலக வங்கியால், பாடசாலைகளுக்கு சமையல் பொருட்கள் வழங்கப்படுகின்றது. அதனை பாடசாலையில் சமைத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

எமது கோட்டத்துக்குட்பட்ட முரசுமோட்டை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பிரமந்தனாறு வித்தியாலயம், மயில்வாகனம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கல்மடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, தர்மபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, இராமநாதபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள், களஞ்சிய அறை உடைக்கப்பட்டு திருடப்படுகின்றன.  

மேற்படி பாடசாலைகள் பின்தங்கிய பிரதேசத்தில் அமைந்துள்ளன. அங்கு கல்விகற்கும் மாணவர்கள், வறுமை காரணமாக காலை உணவை உண்ணாமல், மதியம் பாடசாலையில் தரப்படும் உணவை நம்பி பாடசாலைக்கு வருகின்றனர். சமையல் உணவு களவு போனதால் உணவு தயாரிக்க முடியாமல் போகும் போது, அந்த மாணவர்கள் பசியால் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இராமநாதபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சமையல் பொருட்கள் களவு போனதால், பிள்ளைகள் சமையல் பாத்திரங்களை பார்த்து எப்போது சாப்பாடு வரும் என ஏங்கிச் சென்றதை நேரில் கண்டேன். அந்த மாணவர்களின் நிலையை பார்க்க பரிதாபமாக இருக்கின்றது. இவ்வாறு இடம்பெறும் திருட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்' என அவர் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .