2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘தேர்தலில் முன்னாள் போராளிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்’

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், சண்முகம் தவசீலன்,  க. அகரன்

நாடாளுமன்றத் தேர்தலில், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“அரசியல் ரீதியாக சரியான பாதையில் பயணிக்க வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அப்போதிருந்த தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியிருந்தார்.

“கூட்டமைப்புக்குள் பல்வேறு இழுபறி நிலைகள், பிரச்சினைகள், உள்ளக முரண்பாடுகள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து சில பங்காளி கட்சிகள் பிரிந்து சென்ற போதிலும் மேற்படி தலைவரினுடைய வழி காட்டலினால் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்ற ஓர் நோக்கத்துக்காகவே எமது கூட்டமைப்பை சிதைவடைய செய்யாமலும் அழிந்து போகாமலும் எமது மக்கள் ஆதரித்து பாதுகாத்து வருகின்றனர்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததற்கு பின்னர் எமது புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள், மாவீரர் குடும்பங்கள் மற்றும் யுத்தத்தினால் மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டவர்கள் மட்டில் ஒரு விசேட கருத்திட்டம் உருவாக்கப்படாமலும் முன்னுரிமை அடிப்படையில் ஒரு வாழ்வாதார திட்டம் உரிய முறையில் தற்பொழுது வரை உருவாக்கப்படாமலும் இருந்து வருவது ஓர் பாரிய குறைபாடாகவே காணப்படுகின்றது” எனவும், அவர் தெவித்துள்ளார்.

பொது மக்களுக்கு அப்பால் இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விசேட கருத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு இவர்களுடைய வாழ்வாதாரம் பிள்ளைகளின் கல்வி என்பன கவனிக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், அவர் கூறியுள்ளார். 

“ஆனால் இவை எதுவும் உரிய முறையில் நடைபெறவில்லை. இருந்தும் என்னால் முடிந்த இவர்களுக்கான சில கருத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது இடைநடுவில் நிறுத்தப்பட்டதை நீங்கள் யாவரும் அறிவீர்கள் என நம்புகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார். 

“மேலும் தேர்தல் காலத்தின் போது அவ்வப்போது இவர்களுடைய தியாகங்களும் வீர செயற்பாடுகளுமே பலருக்கு மேடையில் பேசுபொருளாக இருக்கின்றது.  தேர்தலின் பின்னர் இவர்கள் யாரோ நாம் யாரோ என்ற நிலைதான் காணப்படுகின்றது.

“இவை எதிர்காலத்தில் மாற்றப்பட வேண்டும். எந்தவொரு போராளியும் தனது சுயநலத்துக்காகவோ, தனது குடும்பத்தின் நலனுக்காகவோ போராட செல்லவில்லை எம்மினம் தலைநிமிர்ந்து உரிமையோடு வாழ வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .