2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம் நிறைவு

Gavitha   / 2016 ஜூலை 10 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என். நிபோஜன்,சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபைக்குட்பட்ட பரவிப்பாஞ்சான் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட மக்கள், தங்கள் காணிகளை இராணுவத்தினர் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக்கோரி சனிக்கிழமை (09) முதல் முன்னெடுத்த கவனயீர்ப்புப் போராட்டம், இன்று ஞாயிற்றுக்கிழமை(10) முற்பகல் 10 மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.சத்தியசீலன், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்துபேசி, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் உடனடியாக கலந்துரையாடி, சரியான தீர்வைப் பெற்றுத்தருவதாக வழங்கிய உறுதிமொழி வழங்கியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

மேற்படி பகுதியைச் சேர்ந்த 56 குடும்பங்களுக்குச் சொந்தமான 17.2 ஏக்கர் நிலப்பரப்பு காணியை இராணுவத்தினர் தங்கள் வசப்படுத்தி வைத்துள்ளனர். தங்கள் காணிகளை விடுவிக்குமாறு பல்வேறு தரப்பினர்களிடம் கோரிக்கை முன்வைத்திருந்த மக்கள், இறுதியாக மேற்படி முகாம் பொறுப்பதிகாரியிடமும் கோரிக்கை முன்வைத்தனர்.

சொந்த மாவட்டத்திற்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்களாக அகதி வாழ்வு வாழ்ந்து வருவதாகவும் தங்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி, பரவிப்பாஞ்சான் பிரதான வீதியில் சனிக்கிழமை (09) முதல் மக்கள் இந்தப் போராட்டத்தை இரவு பகலாக  முன்னெடுத்திருந்தனர்.  

பரவிப் பஞ்சான மக்களுக்கு விரைவில் தீர்வு

'பரவிப் பஞ்சான் மக்களுக்கான தீர்வுகள் விரைவில் பெற்றுக்கொடுக்கப்படும் என்று, கிளிநொச்சி இராணுவ கேர்ணல்கொலம்பகே தெரிவித்தார்.

இராணுவத்தினரின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் பகுதிக்கு சனிக்கிழமை (09) இரவு விஜயம் செய்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மக்களுடன் உரையாடுகையில், 'இராணுவத்திடமுள்ள காணிகளை கட்டம் கட்டமாக விடுவித்து வருகின்றோம். தங்களது கருத்துக்களையும் ஏற்று உங்களது காணிகளை விடுவிப்பதற்கு உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வை பெற்றுத் தருவேன்' என்று கூறினார்.

'இருப்பதற்கு ஒரு உறைவிடம் இல்லை என்பதாலேயே நாம் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளோம். காணிகள் கிடைக்கும் வரை அமைதியான முறையில் இந்தப் போராட்டம் தொடரும். திங்கட்கிழமை (11) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உறுதியான முடிவை பெற்றுத் தர வேண்டும்' என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .