2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மக்களுக்கு வழங்க முடியாத காணிகள் இராணுவத்துக்கு வழங்கப்படுவது எவ்வாறு?

Niroshini   / 2016 மார்ச் 17 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட உழவனூர் கிராம மக்கள் தமக்கான காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தருமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

1959ஆம் ஆண்டு அரச ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த கிராமத்தில் வாழ்ந்த மக்கள்  1970ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வெளிநாடுகளுக்கும்  யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தக் கிராமம் காடு வளர்ந்து மக்கள் நடமாட்டமற்ற பிரதேசமாக மாறியுள்ளது. எனினும் கடந்த காலத்தில் நிலவிய யுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் உழவனூர் கிராமத்துக்கு வந்து காடுகளை வெட்டி துப்புரவு செய்து குடியேறியுள்ளனர்.

இதற்கமைய விவசாயத்தை ஜீவனோபாயத் தொழிலாகக்கொண்டு வாழும் இந்த கிராம மக்கள், இறுதிக்கட்ட போரின் போது அனைத்தையும் இழந்த நிலையில், இடம்பெயர்ந்து கடந்த 2010ஆம் ஆண்டு மீளக்குடியேறியுள்ளனர்.

எனினும் அன்றிலிருந்து இன்று வரை எந்தவித வசதிகளும் செய்துகொடுக்கப்படாது உழவனூர் கிராமம் மிகவும் பின்தங்கிய கிராமமாகவே காணப்படுவதால் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

நாற்பது வருடங்களுக்கு மேல் உழவனூர் கிராமத்தில் தாம் வாழ்ந்து வருகின்ற போதிலும்,  காணிகளுக்கான உரிமம் இல்லை என்று கூறி கிராம அபிவிருத்தியை அரச அதிகாரிகள் தட்டிக் கழித்து வருவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் ஒருவர் பத்து வருடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் இருந்தால் குறித்த காணியை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சட்டத்தை நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள போதிலும், இந்த சட்டம் உழவனூர் மக்களுக்கு பொருந்தாதா? என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதேவேளை, மத்திய வகுப்புத்திட்ட பகுதியிலுள்ள 35 ஏக்கர் காணி பிரதேச செயலாளரின் அனுமதியுடன் இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் மக்கள், மத்திய வகுப்புத்திட்டம் என்ற பெயரில் மக்களுக்கு வழங்க முடியாத காணிகள் எவ்வாறு இராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .