2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யுத்தத்தால் இழந்தவற்றை உடனடியாக பெறமுடியாது: பிரதியமைச்சர் முரளிதரன்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

கடந்த 30 வருடங்களாக பல இன்னல்களை அனுபவித்து வந்தோம். நாம் இழந்தவற்றை ஒரு சில மாதங்களில் பெற்றுவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எல்லாமே நடைபெறும். கிழக்கில் இப்போதுதான் அனைத்து மக்களும் குடியமர்த்தபட்டு மகிழ்ச்சியான, திருப்தியான சூழல் உருவாகியிருக்கிறது. வடக்கில் கடந்த எட்டு ஒன்பது மாதங்களாகத்தான் தீவிரமான மீள்குடியேற்றம் நடைபெற்று வருகிறது. விரைவில் எஞ்சியுள்ள அனைவரையும் மீளக் குடியமர்த்துவோம் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை வவுனியாவிலுள்ள வலயம் 4 இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்களைச் சந்தித்து அவர்களுடைய குறைகள் மற்றும் தேவைகளைக் கேட்டறிந்து கொள்ளும் நிகழ்வில் பேசுகையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு தேரிவித்தார்.

மேலும் அங்கு உரையாற்றிய அவர், வன்னி மக்களுக்கு இராணுவம் பொலிஸ் சார்ந்து இன்னமும் ஒருவிதமான அச்சம் இருக்கிறது. கிழக்கில் அந்த நிலை மாறியிருக்கிறது. நீங்களும் நெருக்கமாகவும் அச்சமின்றியும் பழகும் வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. அதன் மூலம் நீங்களும் விரைவில் மகிழ்ச்சியான வாழ்வை வாழ ஆரம்பிக்க வேண்டும் என்பதே எம்முடைய விருப்பம்.

மீளக்குடியமர்த்துவதில் இப்போது கண்ணிவெடி அகற்றுதலே பிரச்சினையாக உள்ளது. எனவே விரைவாக இலட்சக்கணக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றியாகவேண்டும். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் தேவை.

அரசசார்பற்ற நிறுவனங்கள் இப்பணியில் மிகவும் மெதுவாகவே ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் ஒரு கிலோமீற்றரை ஒருமாதத்தில் துப்பரவு செய்தால் எமது இராணுவத்தினர் 20 கிலோமீட்டரைத் துப்புரவு செய்வார்கள். அதற்காக அதிகளவு இராணுவத்தினர் தேவைப்படுகிறார்கள்.
அந்தவகையில் இப்போதுள்ள 5 நலன்புரி நிலையங்களை 2 ஆகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். எனவே நீங்கள் வலயம் 0 மற்றும் 01க்குச் சென்று உங்களது பிரதேசங்களில் கண்ணி வெடிகள் அகற்றப்படும் வரை தங்கியிருங்கள்.

புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றை அகற்றுவதற்கு அதிகளவான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நிருவாகச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக முகாம்களைக் குறைக்கவுள்ளோம்.

கடந்த வாரத்தில் மூதூரில் வெடிக்காத வெடிபொருள் ஒன்று வெடித்ததில் ஒரு சிறுவன் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்திருந்தனர். அதுபோன்றதொரு சம்பவம் இனிமேல் நடந்து விடக் கூடாது. அதனை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். யுத்த காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அப்பால் இன்றைய நிலையில் ஒரு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம் என்றார்.
இராமநாதன் நலன்புரி நிலையம், வலயம் 4 ஆகியவற்றிற்கு சென்று அங்கிருந்த மக்களிடம் நிருவாகச் சிக்கல் காரணமாக இந்த முகாம்களை ஒன்றாக்குவது பற்றி பிரதியமைச்சர் கலந்துரையாடினார்.

இதன்போது கருத்துவெளியிட்ட மக்கள், தங்களை வேறு இடங்களுக்கு மாற்றாது சொந்த இடங்களிலேயே குடியமர்த்துமாறு கேட்டுக் கொண்டனர். நாங்கள் இரண்டு வருடங்களாக இந்த முகாமில் இருக்கிறோம். இங்கு எந்தப்பிரச்சினையும் இல்லை. எனவே எங்களுடைய சொந்த இடங்களில் குடியமர்த்தினால் போதும் எனவும் தெரிவித்தனர்.

இச் சந்திப்புகளின் போது, மீள்குடியேற்றத்துக்குப் பொறுப்பான பிரிகேடியர் வடுகெடபிட்டிய, மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன், மக்கள் தொடர்பு அதிகாரி ஜஸ்ரின், 23ஆவது பிரிகேட்டின் கேர்ணல் திலக் பிரேமதிலக உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X