2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அடுத்து வரும் சமூகத்தினரையாவது பாதுகாக்க முனைவோம்: சந்திரகுமார் எம்.பி

Menaka Mookandi   / 2011 ஜூன் 19 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)
 
கடந்த கால போரின் விளைவாக எமது இளம் தலைமுறையினரின் பெரும் பகுதியினைரை நாம் இழந்துவிட்டோம். எனவே அடுத்துவரும் சமூகத்தினரையேனும் அழிவிலிருந்து காக்க முனைவோம் என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.  

ஆனைவிழுந்தான் பகுதியில் சந்தைக் கட்டடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து அவர் பேசுகையில்,

'ஒரு சமூகத்தின் வாழ்வைத் தீர்மானிக்கின்ற மிக முக்கியமான காரணி பொருளாதாரமேயாகும். இதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சமூகம் அபிவிருத்தியில் மேம்பாடடைய வேண்டும்.

பசியிலும், பட்டினியிலும் வறுமையிலும் வாடும் எம்மக்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதே எமது கடமையாகவுள்ளது. இதற்காக சரியான அணுகுமுறைகளின் அடிப்படையில் நிதானமாக திட்டங்களை வகுத்துச் செயற்பட்டு வருகின்றோம்.

இதிலிருந்து மாறுபாடான கருத்துக்களை திணிக்க முயலும் சக்திகளால் எமது சமூகம் மீண்டும் அழிவையே சந்திக்க நேரிடும். எனவே மக்கள் இவ்விடத்தில் மிக நிதானமாக செயற்படவேண்டும்.

அத்தோடு, கடந்த கால போரினால் நாம் எமது மூன்று தலைமுறையினரை இழந்து விட்டோம். இன்று எஞ்சியிருப்பவர்கள் வயோதிபர்களும், கைம்பெண்களும் ஊனமுற்றோரும் மட்டுமே.  எனவே மீண்டும் எமது சமூகம் வளம்பெறவேண்டும்.
 
வாழ்வாதாரத்திலும் அடிப்படைக் கட்டுமானங்களிலும் மேம்பாடடைய வேண்டும். இழந்த பொருளாதாரத்தை மீளப்பெறவேண்டும். அந்த வகையில் நாம் மிகுந்த கரிசனையாக உள்ளோம்.

வெகுவிரைவில் இப்பகுதிக்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்துகின்ற வழிமுறைகளை ஏற்படுத்தித் தரவுள்ளோம். அவற்றோடு இம்மக்களின்  அடிப்படைத் தேவைகள் அனைத்தும் எம்மால் இனங்காணப்பட்டுள்ளன.

விரைவில் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான செயற்பாடுகளை நாம் மேற்கொண்டுவருகின்றோம்.
கிளிநொச்சி மாவடடத்தின் அபிவிருத்திக்காக அரசு கிட்டத்தட்ட ஏழு கோடி ரூபாய்களை செலவு செய்துள்ளது.  ஆனால் வெளித்தோற்றப்பாட்டிற்கு எவையுமே நடைபெறாதது போல் தென்படுகின்றன.

திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக நடைபெறுகின்றன.  விரைவில் அவை நிறைவுபெற்றதும் அதன் முழுப்பயனையும் மக்கள் அனுபவிக்க முடியும்' என அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .